Published : 23 Feb 2020 07:44 AM
Last Updated : 23 Feb 2020 07:44 AM

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணிகளை நிரப்ப இடைக்கால தடை- இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் குழப்பம்

சென்னை

இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் யுஜிசி பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளபேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பாலிமர் சயின்ஸ் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தின்போது பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லதுசம்பந்தப்பட்ட துறை வாரியாக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா என்பதில் குழப்பம் நிலவியது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணிநியமனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பும்போது ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் பலன் பெறும் வகையில் பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடுமுறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கடந்த 2019-ல்சட்டம் இயற்றியது. இதன்படி இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என யுஜிசியும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 2019 ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜன.5 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அந்தந்த துறை வாரியாக இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் பாலிமர் சயின்ஸ்பிரிவில் உள்ள இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ள நான் பாதிக்கப்படும் சூழல்ஏற்பட்டுள்ளது. எனவே சென்னைபல்கலைக்கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை பின்பற்றிபுதிதாக அறிவிப்பாணை வெளியிடஉத்தரவிட வேண்டும். அதுவரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ராஜசேகரன், எம்.பழனிமுத்து ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என இடைக்காலத்தடை விதித்து, இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம், மத்திய, மாநிலஅரசுகள், யுஜிசி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.25-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x