

மரச்செக்கு எண்ணெய், வெல்லம், புளி, சிறுதானிய வகை மாவுகள் உள்ளிட்ட உழவர் உற்பத்தி பொருட்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் விற்கப்படுகிறது. மலிவு விலையில் தரமாக இருப்பதால், பொதுமக்கள் இப்பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், வறட்சி, கனமழை போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்டாலும், தனது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது, அத்தொழிலில் ஈடுபடுவோரை கவலைக்குள்ளாக்கி விடுகிறது.
இடுபொருட்களை சில்லறை விலையில் வாங்கும் உழவர்கள், உற்பத்தி பொருட்களை மொத்த விலையில் விற்பதால், அவர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. இந்நிலையில், உற்பத்தி பொருட்களை சில்லறை விலையில் விற்று அதிக லாபம் ஈட்டவும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தவும் வேளாண் துறை சார்பில் கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 20 உறுப்பினர்களைக் கொண்ட உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, அதில் 5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உழவர்கள், தங்களது உற்பத்தி பொருட்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பொருட்கள் மலிவு விலையில், தரமாகவும் இருப்பதால் அப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், வெட்டுவாணம் கிராமத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சு.வெங்கடேசன் கூறியதாவது:
எங்கள் குழு சார்பில், ரூ.13 லட் சம் செலவில் 3 மரச்செக்குகள், ஒரு வேர்க்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை வாங்கினோம். இதற்கு வேளாண் துறை சார்பில் கூட்டுப் பண்ணைய திட்டடத்தின்கீழ் ரூ.10 லட் சம் மானியம் கிடைத்தது.
அந்த இயந்திரங்களைக் கொண்டு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சாமை, திணை, கேழ்வரகு போன்ற சிறுதானிய மாவுகள் போன்றவற்றை உற்பத்தி செய்தோம். அதை சந்தைப்படுத்த முடியவில்லை. பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தை அணுகி, அந்த அலுவலகத்தில் பொருட்களை விற்க அனுமதி கோரினோம். மாதம் 2 புதன்கிழமைகளில் மட்டும் விற்க அனுமதி கிடைத்தது.
நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அனைத்து புதன்கிழமைகளிலும் விற்கிறோம். மேலும், நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்திலும் விற்று வருகிறோம். பொருட்களின் தரத்தையும், விலையையும் பார்த்த கனரா வங்கி நிர்வாகம், தேனாம்பேட்டையில் உள்ள அதன் மண்டல அலுவலகத்திலும் விற்க அனுமதி வழங்கியுள்ளது.
எங்களிடம் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.350, கடலை எண்ணெய் ரூ.200, தேங்காய் எண்ணெய் ரூ.240, ரசாயனம் கலக்காத ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.100, வெல்லம் ரூ.70, கேழ்வரகு மாவு ரூ.60, வேர்க்கடலை ரூ.120, சாமை, திணை, குதிரைவாளி மாவுகள் ரூ.100, புளி ரூ.100, பால் கோவா ரூ.240 என விற்பனை செய்து வருகிறோம்.
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு எங்களின் பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கு வாய்ப்பளித்த வேளாண்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.