Published : 23 Feb 2020 07:38 AM
Last Updated : 23 Feb 2020 07:38 AM

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை பெண் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த கூடாது- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை பெண் ஊழியர்கள் மற்றவர்களை துன்புறுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறையின்கீழ் செயல்படும் டிரேட்மார்க் துறையின் சென்னை அலுவலக துணைப் பதிவாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் தன்னிடம் வரம்புமீறி பேசுவதாக அதே அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவர் கடந்த 2013-ம் ஆண்டு குற்றம்சாட்டி உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பிறகு கடந்த 2016-ம் ஆண்டு நடராஜன் தனக்குபாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக அவர் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக சமூகநலத்துறையின்கீழ் செயல்படும் கமிட்டியும் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரியும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். தனக்கு எதிரான புகார் குறித்து ஒரே நேரத்தில் 2 விசாரணை நடத்துவது விதிகளுக்கு முரணானது எனக்கூறி நடராஜன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அந்த பெண் அலுவலர் முதலில் பொதுவான குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு தனது 2-வது குற்றச்சாட்டில் பாலியல் தொல்லை தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட கமிட்டி குற்றம்சாட்டப்பட்டவரின் கருத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது. பெண் ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்காமல் சென்றால் உயரதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். ஆனால் அதற்காக அந்த உயரதிகாரி தனக்கு தொல்லை தந்ததாகக் கூறி அவரை சிக்க வைப்பதற்காக இதுபோன்ற புகார்களை அளிக்கக் கூடாது.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தை பெண்கள் தங்களின் சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும். மற்றவர்களை துன்புறுத்தும் வகை யில் அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. எனவே மனுதாரரான நடராஜன் மீதான புகாரை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x