Published : 23 Feb 2020 07:36 AM
Last Updated : 23 Feb 2020 07:36 AM

தடுப்புச் சுவர் கட்டுவதில் முறைகேடு; அடையாறு ஆற்றில் இறங்கி திமுகவினர் போராட்டம்- மா.சுப்பிரமணியன் உட்பட 300 பேர் கைது

அடையாற்றில் தடுப்புச் சுவர்கட்டுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள நீர் உட்புகாமல் தடுக்க அடையாற்றின் கரையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறியும் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரியும் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அடையாற்றின் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத் தில் தங்கவைத்தனர். பின்னர் மாலை யில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக போராட்டத்தின்போது பேசிய மா.சுப்பிரமணியன், ‘‘அடையாற்றின் கரையில் 41 கிமீ தூரத்துக்கு வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். ஆனால், 800மீட்டருக்கும் குறைவாகவே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. எம்.சாண்ட்மூலம் கட்டாமல் ஆற்றங்கரையில் உள்ள புழுதி படிந்த மண், சாக்கடை தண்ணீர் மூலம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் அள்ளப்படும் மணலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

கண்காணிக்க வேண்டும்

இந்தப் போராட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புச் சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றில்இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கண்காணிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x