Published : 23 Feb 2020 07:33 AM
Last Updated : 23 Feb 2020 07:33 AM

‘விக்கிப்பீடியா’ கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் தமிழ் மொழி முதலிடம்

தஞ்சாவூர்

இந்திய அளவில் 331 பயனர்கள் பங்கேற்று 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதியதில் தமிழ் மொழி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இணையதளத்தில் அதிகமானோரால் தேடப்படும் விக்கிப்பீடியாவில் அவ்வப்போது கட்டுரைப் போட்டிகள், ஒளிப்படப் போட்டிகள் நடத்தப்படும். விக்கிப்பீடியா, ‘வேங்கைத் திட்டம் 2.0’ ‘ஆசிய மாதம் தொடர் தொகுப்பு’, ‘பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்’ என 3 போட்டிகளை நடத்தியது.

இதில் வேங்கைத் திட்டம் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதன்படி, வேங்கைத் திட்டத்தில் 62 பயனர்கள் கலந்துகொண்டு 2,959 கட்டுரைகளை தமிழில் வெளியிட்டு தமிழ் மொழி முதலிடத்தைப் பெறச் செய்துள்ளனர். 2-வது இடத்தை பஞ்சாபி குர்முகி மொழியும் (1,768 கட்டுரைகள்), 3-வது இடத்தை வங்காள மொழியும் (1,460 கட்டுரைகள்) பெற்றுள்ளன.

மேலும் உருது மொழியில் 1,377 கட்டுரைகள், சந்தாலி(566), இந்தி (417), தெலுங்கு (416), கன்னடம் (249), மலையாளம்(229), சம்ஸ்கிருதம் (19) உள்ளிட்ட பல மொழிகளில் கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன.

இப்போட்டிக்காக இந்திய மொழிகளில் எழுதப்பட்ட மொத்தமுள்ள கட்டுரைகளில் 24 சதவீதத்தை தமிழ் மொழி பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழில் அதிக கட்டுரைகள் எழுதியவர்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பதிவாளருமான பா.ஜம்புலிங்கம் கூறியதாவது:

தமிழில் இல்லாத தகவலே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத, கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தமிழின் பெருமையை உயர்த்த வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா தொடர்ந்து முன்னணியில் இருக்க இளைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

‘வேங்கைத் திட்டம் 2.0’ என்ற போட்டிக்காக நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூரு பழைய மடிவாளா சோமேஸ்வரர் கோயில், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் நான் 260 கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

இதில், 629 கட்டுரைகளை எழுதி பாலசுப்பிரமணியன் என்பவர் முதல் இடத்திலும், 492 கட்டுரைகளை எழுதி ஞா.தர் என்பவர் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

தமிழ் விக்கிபீடியாவில் இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள், கலைக்கூடங்கள், அறிவியல் மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றைப் பற்றிய தலைப்புகளில் கட்டுரைகள் அதிகம் பதிவிடப்பட்டுள்ளன.

விக்கிப்பீடியாவில் எழுத முன்வருவோருக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தயாராக உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x