Published : 23 Feb 2020 07:31 AM
Last Updated : 23 Feb 2020 07:31 AM

செயற்கைக் கோள் அனுப்புவதில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

செயற்கைக்கோள் அனுப்புவதில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ககன்யான் விண்கலம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் இந்த முயற்சியில் முதல் கட்டமாக நிலவில் விண்கலம் மெதுவாக இறக்கப்படும். இரண்டாம் கட்டமாக நிலவில் இறக்கிய விண்கலத்தை மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே மூன்றாவது கட்டமாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும்.

நிலவு குறித்து ஆய்வு

இந்தியா விண்வெளித் துறையில் செயற்கைகோள் அனுப்புவதில் தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக கனிமங்கள் ஆராய்ச்சி, தொலை தொடர்புத் துறை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதற்கான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் அடுத்தகட்டமாகவே நிலவு குறித்து ஆராய்வதற்காக செயற்கைக்கோள்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

செயற்கைக்கோள் ஏவுதளம் குலசேகரபட்டினத்தில் அமையும் பட்சத்தில், செயற்கைக்கோள் ஏவுவதற்கான செலவுகள் பெரும்பாலும் குறையும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், இரண்டு டன்னுக்கும் அதிகமாக எடை கொண்ட செயற்கைகோளையும் ஏவமுடியும்.

அனைத்து காலங்களிலும் செயற்கைக்கோளை ஏவுவதற்கான பருவநிலை குலசேகரபட்டினத்தில் உள்ளதால் ஹரிகோட்டாவை காட்டிலும் சிறந்த செயற்கைக்கோள் ஏவுதளமாக குலசேகரபட்டினம் அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x