

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. 7 ஊர்களுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மகாசிவராத்திரி தினத்தில் வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களில் வள்ளியம்மாள், கிழவியாத்தா ஆகிய மூதாட்டிகள் அப்பம் சுட்டனர். கடந்த 50 ஆண்டுகளாக முத்தம்மாள் என்ற மூதாட்டி மகா சிவராத்திரிதோறும் இந்நிகழ்வை நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 40 நாட்களாக விரதம் இருந்து வந்த முத்தம்மாள், நேற்று முன்தினம் நள்ளிரவில் விறகு அடுப்பில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார்.
முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவற்றை உரலில் இடித்து அப்பத்துக்குத் தேவையான இனிப்பு உருண்டைகள் தயார் செய்யப்பட்டன. பின்னர், அவற்றை அப்பமாக தட்டி நெய்யில் சுட்டு வெறும் கையால் முத்தம்மாள் எடுத்தார். இந்த அப்பத்தை பிரசாதமாக பெற்று சாப்பிடுவதன் மூலம் உடல்நலம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்நிகழ்வை காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.