தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மைய அதிகாரிகள் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மைய அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

தமிழகம், புதுவையில் அடுத்த இரு நாட் களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அண்மை காலமாக பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவில் குளிர்ச்சியான கால நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதுச்சேரி கடற்கரை பகுதியில் லேசான மழை பொழிவு இருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக் கடலில் இருந்து கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 4 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 செமீ, தூத்துக்குடி, திருச்செந்தூரில் தலா 2 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in