Published : 23 Feb 2020 07:01 AM
Last Updated : 23 Feb 2020 07:01 AM

கடலூர், நாகையில் ரூ.92,000 கோடியில் அமையவிருந்த பெட்ரோலிய மண்டல திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலுக்கு வந்ததால் நடவடிக்கை

சென்னை

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்டம், ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி டெல்டா பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் கடலூர், நாகப்பட்டினத்தில் ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை அரசு ரத்து செய்துள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9-ம் தேதி நடந்த கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’’ என்று அறிவித்தார்.

கடந்த 19-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், முதல் வரின் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவாக ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக் கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக மாற்ற வகைசெய்யும் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் 2020’, சட்டப் பேரவையில் கடந்த 20-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்தச் சட்டத்தை தமிழக அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது. இதன்மூலம் காவிரி டெல்டா பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

இந்த புதிய சட்டத்தின்படி தஞ் சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன் னார்கோவில், மேல்புவனகிரி, கீரப் பாளையம், பரங்கிப்பேட்டை, கும ராட்சி வட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டங் கள் இனி முழுமையான வேளாண் பகுதிகளாகத் திகழும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் இரும்புத்தாது செயல் முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, துத்தநாகம், செம்பு மற்றும் அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களைப் பதப் படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய், நிலக்கரி படுகை மீத்தேன், ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கிய இயற்கை எரிவாயுக்களை பிரித்தெடுப் பது, அதுதொடர்பான ஆய்வு, துளைப்பது, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை என விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பணிகளை இனிமேல் தொடங்க முடியாது. தடை செய்யப்பட்ட எந்த தொழிலையும், யாரும் தொடங்கக் கூடாது.

அதேநேரம், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்பு செயல்பாட்டில் உள்ள திட்டங் களுக்கு எந்த பாதிப்பும் இருக் காது. துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேற் கொள்ளவும் தடை இல்லை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலச் சட்டத்தை மீறினால் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தடையை மீறுவோருக்கு ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் என கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

வேளாண் மண்டலச் சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு’ உரு வாக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர், நிதி, சட்டம், வேளாண்மை, சுற்றுச் சூழல், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி, தொழில் துறை, ஊரக தொழில்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அமைச் சர்கள், செயலாளர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப் பார்கள். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவில் குழு செயல்படும்.

அறிவிப்பாணை ரத்து

தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலியம், ரசாயனம், சுத்திகரிப்பு பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க தமிழக அரசு கடந்த 2017 ஜூலை 19-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், ஏற்றுமதி சிறு துறைமுகங்கள் ஆகிய வற்றை அமைக்க திட்டமிடப்பட்டிருந் தது. இதற்காக சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நிதியும் ஒதுக்கியது.

தற்போது, இப்பகுதியில் பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெட்ரோலிய மண்டலத்துக்கான அறி விப்பாணையை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவை அத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி பிறப் பித்துள்ளார். பெட்ரோலிய மண்டல அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்ட உத்தரவும், தமிழக அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x