அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர் பழனிசாமி உறுதி

அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர் பழனிசாமி உறுதி
Updated on
1 min read

அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலைய இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

''புனித சூசை அறநிலைய பள்ளியினுடைய செயலாளர் பங்குத் தந்தை, எங்களுக்கு அரசின் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாம் கிடைக்கின்றன. சைக்கிள் கூட கிடைக்கின்றது. ஆனால் மடிக்கணினி கிடைக்கவில்லை. ஆகவே, எங்களுடைய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கும், பொது அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பில்லாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, அரசின் சார்பாக மடிக்கணினி வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.

இந்த இல்லத்திலே படிக்கின்ற தாய் தந்தை இல்லாத இந்த குழந்தைகளுக்கு ஜெயலலிதா அரசு தாய் தந்தையாக இருந்து உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அதோடு அவர் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகின்றபோது, இந்த புனித சூசை அறநிலையம் நடத்துகின்ற பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அரசின் சார்பாக வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த இல்லத்தைத் தொடங்கி 166 ஆண்டுகள் ஆகின்றன என்று குறிப்பிட்டார்கள். முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவும், பெருந்தலைவர் காமராஜரும், எங்கள் இயக்கத்தை உருவாக்கிய பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரும் வருகை தந்து, கால் பதித்த இடம் இந்த இல்லமாகும். அந்த இடத்தில் நானும் வந்து உங்களோடு சேர்ந்து கலந்துரையாடியதில் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் எல்லாம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர்கள். அப்படி நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த போற்றுதலுக்குரிய தலைவர்கள் இந்த இல்லத்திற்கு வந்து சிறப்பித்திருக்கின்றார்கள். இந்த இல்லம் மேலும் மேலும் வளர்ந்து சேவை புரிய என்னுடைய வாழ்த்துகள்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in