தமிழக சட்டக் கல்லூரிகள் அமைதிப் பூங்காவாக திகழ்கின்றன: சட்டக் கல்வி இயக்குநர் பெருமிதம்

தமிழக சட்டக் கல்லூரிகள் அமைதிப் பூங்காவாக திகழ்கின்றன: சட்டக் கல்வி இயக்குநர் பெருமிதம்
Updated on
1 min read

"தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் அமைதி பூங்காவாக திகழ்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக சட்டக் கல்லூரி மாணவர்கள் எவ்வித போராட்டங்களிலும் பங்கேற்பதில்லை" என்று தமிழக சட்டக் கல்வி இயக்குநர் முனைவர் நா.சு.சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்ற 2-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டக் கல்லூரிகளுக்கு நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ வருவதில்லை.

சட்டக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர வராமல் இருந்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அடிதடி கல்லூரிகள் என்று சட்டக் கல்லூரிகளை அழைக்கும் நிலை இருந்தது. இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மருத்துவ படிப்புகளுக்கு அடுத்ததாக சட்டப் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்யும் நிலைக்கு சட்டக் கல்வி உயர்ந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.687 கோடி அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. 128 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 43 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது.

70- 30 என்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் படிப்பை மட்டுமின்றி, அவர்களது வருகை, வாதிடும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. 7 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் 5-ல் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

அவர்களது ஆங்கிலத் திறனை வளர்க்கும் நோக்கத்தில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். சட்டக் கல்வியின் தரம் பெருமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த சட்டக் கல்லூரிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்று எந்த போராட்டத்திலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கவில்லை. மொத்தத்தில் இன்றைய சட்டக் கல்லூரிகள் அமைதி பூங்காவாக திகழ்கின்றன.

குற்றப்பின்னணியுள்ள வழக்கறிஞர்களை அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தோஷ்குமார், தனது தீர்ப்பு ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை இப்போது வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in