Published : 22 Feb 2020 02:21 PM
Last Updated : 22 Feb 2020 02:21 PM

விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்களை அதிகம் பாதித்ததால், சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவித்ததால் பொதுமக்கள் அதை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி போராட்டத்தின் நூறாவது நாள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பெரிய பேரணி சென்றது. அதில் வன்முறை ஏற்பட்டது.

அதைக் காரணம் காட்டி, அப்பாவி பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்கிற கேள்வி எழுந்தபோது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னர் தான் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருந்த ரஜினி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடிக்குச் சென்றார். ஊர்வலமாக அவர் சென்றது விமர்சிக்கப்பட்டது. அங்கு அவரை சந்தோஷ் என்கிற இளைஞர், ''நீங்கள் யார்?'' எனக் கேட்டது வைரலானது.

அதே நிலையில் சென்னை திரும்பிய ரஜினி, ''போராட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவினர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினர், போலீஸாரைத் தாக்கிய பிறகுதான் இந்தச் சம்பவமே நடந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கடைசி நாளில் ஊடுருவியதுபோல் இதிலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஊடுருவிக் கலவரத்தை ஏற்படுத்தினர். சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன. ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.

''உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ''எனக்குத் தெரியும்'' என்று கூறிய ரஜினி, ''எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்'' என்று பேட்டி அளித்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

இதுவரை 18 கட்ட விசாரணை முடிந்து, 704 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 445 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் 19-வது கட்ட விசாரணை, வருகிற 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.

விசாரணைக்கு ஆஜராக பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிப்.25-ம் தேதி ஆஜராக நடிகர் ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. சமீபத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை ஆணையத்துக்கு ஒத்துழைப்பு தருவேன் என்று ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்களிக்கும்படி ரஜினி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், சினிமாவில் உச்சபட்ச அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும்போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வந்துவிடலாம் எனக் கூறி விலக்குக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தரத் தயார் எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வேண்டுகோளை ஏற்பது குறித்து விசாரணை ஆணையம்தான் முடிவெடுக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x