

தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என, ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனைக் கட்டாயமாக்கி, 1977 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.575 இதுவரை செயல்படுத்தப்படாதது குறித்தும் அவர் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் இவ்வாறு பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எப்போது என, ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.22) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ?
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று 1977 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.575, 42 ஆண்டுகளாகியும் செயலாக்கப்படவில்லை. தமிழர் தெருக்களில் விரைவில் தமிழ் செழிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.