ஏடிஎம்மில் மோசடி செய்த நைஜீரிய இளைஞர் சென்னையில் கைது

ஏடிஎம் மோசடி தொடர்பாக நைஜீரிய இளைஞரிடம் விசாரிக்கும் புதுச்சேரி எஸ்எஸ்பி ராகுல் அல்வால்
ஏடிஎம் மோசடி தொடர்பாக நைஜீரிய இளைஞரிடம் விசாரிக்கும் புதுச்சேரி எஸ்எஸ்பி ராகுல் அல்வால்
Updated on
1 min read

புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் சாதனம் பொருத்தியது தொடர்பாக நைஜீரியா நாட்டு இளைஞரை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய வெனிசுலா, பல்கேரியாவை சேர்ந்தோரை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அந்த ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில், மர்ம அட்டை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். உடனே அந்த அட்டையை எடுத்து பார்த்தபோது, அதில் மெமரி கார்டு, சிப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன. உடனே அதை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். ஏடிஎம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த அவரை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறும்போது, ‘‘மரைன் என்ஜினீயரான நைஜீரியா இளைஞர் ஜேஷர் செலஸ்டின் என்பவரை சென்னையில் கைது செய்தோம். இவ்வழக்கில் தொடர்புடைய பல்கேரியாவை சேர்ந்த மிலன் அலெக்சாண்ட்ரவ், வெனிசுலாவை சேர்ந்த மில்டன் விளாடிமர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தீவிரமாக தேடி வருகிறோம்.

ஏடிஎம் மையத்தில் ரகசிய எண்ணை பதிவிடும் இடத்தில், ரகசிய சாதனத்தை பொருத்தி, அதன் மூலம் வீடியோ பதிவுகளை கொண்டு ரகசிய எண்ணை கண்டறிந்து பணம் திருடும் வெளிநாட்டு கும்பல் இது.

எத்தனை மையங்களில் இதுபோன்று பொருத்தியுள்ளனர் என்பதை விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in