

மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது யோக கலை என குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.
கோவை வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷாயோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கியது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுடன், சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தற்போது அனைத்து துறைகளிலும் போட்டி உள்ளது. பலர் இயந்திரமயமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மன அமைதிதான் இன்றைக்கு அனைவரின் தேவையாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மன அமைதி இல்லையெனில் நிம்மதியாக வாழ முடியாது. யோகா என்பது மதம் சார்ந்ததோ, அரசியல் சார்ந்ததோ அல்ல. அது ஒரு கலை. யோகா என்பது அறிவியல். அதை யார்வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யோக பயிற்சியை மேற்கொண்டு வந்தால் நிம்மதியான வாழ்க்கையைப் பெறமுடியும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. பணத்தைவிட உடல் நலம் அவசியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற சத்குரு, தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார்.
விழாவில், தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மகா யாத்திரை, பாரம்பரிய இசைமற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், லேசர் நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெற்றன. இதில், தமிழகம் மட்டுமல்லாதுவெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கானோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.