சிலை திருட்டு கும்பலை சரணடைய வைக்க போலீஸார் திட்டம்

சிலை திருட்டு கும்பலை சரணடைய வைக்க போலீஸார் திட்டம்
Updated on
2 min read

பழமை வாய்ந்த கோயில்களில் இருந்து சிலைகளைத் திருடி கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை சரணடைய வைக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10-க்கும் மேற் பட்ட சிலை திருட்டு கும்பல்கள் உள்ளன. செங்குன்றம் ஜெயக் குமார் தலைமையில் இயங்கி வரும் கும்பல் மிகப் பெரிய தொகைக்கு சிலைகளை விற்பதில் கைதேர்ந்தது. திரைப்பட இயக்குநர் வி.சேகரை ஆசைவார்த்தைக் கூறி இந்த தொழிலில் ஈடுபடுத்திய ஜெயக்குமார் தலைமையிலான குழு 10-க்கும் மேற்பட்ட கோயில் களில் சிலைகளை திருடியது தெரியவந்துள்ளது.

தற்போது 3 கோயில்களில் திருடப்பட்ட 8 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ள 10-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை மீட்க வேண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலைமறைவாக உள்ளவர்கள் போலீஸாரிடம் சிக்கும்போது அந்த சிலைகள் மீட்கப்படலாம். இதற்கிடையே அவர்களை சரணடைய வைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, திருட்டில் தொடர்புடைய நபர்களை தேடப்படும் குற்றவாளி களாக அறிவிக்கச் செய்து தேவைப் பட்டால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதற்கான உத்தரவையும் பெற முயற்சி எடுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தலைமறைவு குற்ற வாளிகள் அச்சமடைந்து தாங்க ளாகவே போலீஸில் சரணடைய முன் வருவார்கள் என்பது போலீஸின் எதிர்பார்ப்பு.

மிகப் பழமையான கோயில்களில் உள்ள ஐம்பொன் சிலை களை பாதுகாக்கும் வகையில் அறநிலையத் துறைக்கு காவல்துறை சார்பில் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பழங்கால சிலைகள் அனைத்திலும் உருவத்தின் பெயர், ஊர் மற்றும் கோயில் பெயருடன் சமீபத்திய வருடத்தையும் எழுத்துகளாக சிலை மீது பொறிக்க வேண்டும். பின்னர் சிலைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கோயில்களில் இருளிலும் துல்லியமாக வீடியோ பதிவு செய்யும் அதி நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என பலமுறை அறிவுறுத் தப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையின் பரிந்துரை இதுவரை செயல்படுத்தப்படாததால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்குருக்கை வீரகடேஸ்வரர் கோயிலில் உள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருடு போயுள்ளன.

வரும் முன் காக்கும் நடவடிக் கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டால் பல திருட்டு சம்பவங் களை தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள் காவல் துறையினர்.

சிலை கடத்தலில் 4 பிரிவுகள்

சிலைகளைத் திருடி கடத்தும் தொழிலில் 4 பிரிவாக ஆட்கள் செயல்படுகின்றனர். பழங்கால சிலைகளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம் என்பதால் சர்வதேச சிலை நிலவரம் தெரிந்த நிபுணர் கொண்ட ஒரு குழு, மிகப் பழமையான கோயில்களை நோட்டமிட்டு சிலைகளை குறித்துக்கொடுக்கும். அதன் பிறகு இரும்பு கிரில்களை வெட்டி திருடுவதில் திறமையானவர்களைக் கொண்ட அடுத்த பிரிவு களத்தில் இறங்கி கோயில் கதவுகளை உடைத்து கச்சிதமாக சிலைகளை திருடிக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு கூலியாக சில லட்சங்களை வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிடும்.

சிலையை கடத்தி விற்பதை தொழிலாகக் கொண்ட பிரதான பிரிவு அடுத்த கட்டமாக சர்வதேச கலைப் பொருட்களை சேகரிக்கும் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஏஜென்ட்களுடன் சேர்ந்து வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் என இந்த தொழிலில் உள்ளவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in