கிரெடாய் வீட்டுவசதி கண்காட்சி-2020 தொடக்கம்: பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

கிரெடாய் அமைப்பு சார்பில் நடைபெறும் 13-வது வருடாந்திர வீட்டுவசதி கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் (இடமிருந்து) கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் தரன், கிரெடாய் சென்னை தலைவர் ஹபீப்.
கிரெடாய் அமைப்பு சார்பில் நடைபெறும் 13-வது வருடாந்திர வீட்டுவசதி கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் (இடமிருந்து) கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் தரன், கிரெடாய் சென்னை தலைவர் ஹபீப்.
Updated on
1 min read

பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கிரெடாய் அமைப்பு சார்பில் 13-வது வருடாந்திர வீட்டுவசதி கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கிரெடாய் வீட்டுவசதி அமைப்பின் அமைப்பாளர் சிவகுருநாதன் வரவேற்புரை ஆற்ற, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் நடுத்தர மக்கள் தங்களது கனவு இல்லங்களை வாங்க இந்தக் கண்காட்சி பெரிதும்உதவும். நடப்பு 2020-21-ம் ஆண்டில்பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், 1.12 லட்சம் தனி வீடுகளும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும். நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்துவரும் நிலத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு, நடுத்தர மற்றும் நலிந்தவருவாய் பிரிவினர் நகர் பகுதிகளில் வீடுகள் வாங்கி பயன்பெறும் நோக்கத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீடான 1.5-லிருந்து 0.5 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதை கட்டுமான துறையினர் வரவேற்றுள்ளனர்.

விலை குறையும்..

மேலும், உயரமான கட்டிடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு 2.50-ல்இருந்து 3.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அதே பரப்பளவு உள்ள மனையில் அதிக அளவில் குடியிருப்புகள் கட்ட இயலும். இதனால், குடியிருப்புகளின் விலை கணிசமாகக் குறையும்.

மேலும், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் - 2019-ன்படி, குறைந்த அகலம் கொண்ட சாலைகளை ஒட்டிய மனைகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிக தளங்களுடன் கூடியகூடுதல் குடியிருப்புகளை கட்டிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் வீடுகளின் விலை கணிசமாக குறைவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

கிரெடாய் சார்பில் பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்துவதற்கும் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விழாவில், தமிழக அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் டி.கார்த்திகேயன், டிடிசிபி ஆணையர் சந்திரசேகர் சக்காமுரி, எஸ்பிஐவங்கியின் தலைமை பொதுமேலாளர் வினய் டான்செ, கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன், சென்னை தலைவர் ஹபீப் உள்ளிட்டோர் பங்கேற்றுபேசினர்.

நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 75 நிறுவனங்களின் 400-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in