

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம்தான் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஹசன் மவுலானா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கே.ஸ்.அழகிரி, அகில இந்தியகாங்கிரஸ் செயலாளர் கிருஷ்ணா அல்லவரு, மூத்த தலைவர் குமரிஅனந்தன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம்தான் விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியாததால்தான் இந்தப் பிரச்சினை அப்படியே கிடப்பில் உள்ளது.
கொலை குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்தால், தமிழக சிறைகளில் உள்ள கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களை யார் விடுதலை செய்வது, அவர்களும் தமிழர்கள்தானே. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோிக்கை விடுப்பவர்கள் வீடுகளில்இதுபோன்ற கொலை நடந்தால் விட்டு விடுவார்களா, 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் காங்கிரஸ் அதனை மறுக்காது. மாறாக அரசியல் கட்சிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்துவதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமானவரித் துறை வழக்கில் சலுகை தரப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்க்கு 24 மணி நேரம் கூட அவகாசம் தரவில்லை. இந்த நியாயத்தைதான் நான் சுட்டிக்காட்டினேன். ரஜினிக்கு எதிராகவோ விஜய்க்கு ஆதரவாகவோ நான் எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் வரவேற்போம். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.