

மலைப்பகுதிகளில் கட்டிடம், மனைப்பிரிவு திட்ட அனுமதிகள் பெற வனம், கனிமவளம், வேளாண்மை பொறியியல் துறைமாவட்ட அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியரிடம் தடையில்லா சான்றுபெற வேண்டும் என வீட்டுவசதித் துறை அறிவுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 2019-20-ம் நிதி ஆண்டுக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,‘ மலையிட பாதுகாப்பு குழுமப்பகுதிகளில் திட்ட அனுமதி விரைவாக வழங்கும் வகையில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, வீட்டுவசதித் துறை செயலர், நகர ஊரமைப்பு இயக்குநருக்கு புதிய நடைமுறைகள் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இவற்றைகள அலுவலர்களுக்கு சுற்றிக்கையாக அனுப்பும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய நடைமுறைகள்:
அரசின் அனுமதி பெற்ற முழுமைதிட்டம் உள்ள மலையிடங்களில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்க நகர் ஊரமைப்புத் துறையில் கூட்டு உள்ளூர் திட்டக் குழுமம்,புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்கள், மண்டல துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், நகர் ஊரமைப்பு இயக்குநருக்கும் மலையிடம் அல்லாத பகுதிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரப் பகிர்வைப்போல், மலையிடங்களிலும் அனுமதி வழங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
முழுமைத்திட்டம் உள்ள பகுதிகளில் அனுமதி வழங்க கனிமவளம், வேளாண்மை பொறியியல்துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள், மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவரின்ஒப்புதலை பெற்று ஆட்சேபனையின்மை கடிதம் வழங்கலாம். வனத்துறைத் தலைவர் தனது இசைவைஒரு மாதத்துக்குள் அளிக்கவில்லை என்றால் இசைவு அளிக்கப்பட்டதாக கருதி மாவட்ட வன அலுவலர் ஆட்சேபனையின்மை கடிதம் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் ஆட்சேபனை இன்மை கடிதத்தையும் பெற்று அனுமதி வழங்கலாம்.
முழுமை திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நிலப்பயன்பாட்டின் வகைப்பாட்டை மாற்றம் செய்வதற்கான திட்டங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.
முழுமைதிட்டம் இல்லாத மலையிடங்களில் கட்டிடங்களை பொறுத்தவரை நடைமுறையில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு அனுமதியளிக்க வேண்டும். மனைப்பிரிவை பொறுத்தவரை நகர்ப்பகுதி எனில் ஒரு ஹெக்டேருக்கு அதிகமாகவும், கிராமப்பகுதி எனில் 2 ஹெக்டேருக்கு அதிகமாகும் திட்டங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன்னனுமதி பெற வேண்டும்.
முழுமைத்திட்டம் இல்லாத மலையிடங்களில் திட்ட அனுமதி வழங்க வனம், கனிமவளம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் ஆகிய 3 துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆட்சேபனையின்மை கடிதம் பெற்று அனுமதி வழங்கப்பட வேண்டும்.