

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு பயணிகள் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இதுதவிர, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
இவ்வாறு, வெளிநாட்டு பயணிகளை அழைத்துவரும் வழிகாட்டிகள், உடை கட்டுப்பாடுகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைப்பது இல்லை. இதனால், வெளிநாட்டினர் லெக்கின்ஸ், மினி ஸ்கர்ட், டி-ஷர்ட், ஷாட்ஸ் போன்றவற்றை அணிந்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. இந்த விதியை பக்தர்கள், வெளிநாட்டு பயணிகள் உட்பட அனைவரும் முறையாக பின்பற்றும் விதமாக, உடைகள் கட்டுப்பாடு குறித்து கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளது.
‘ஆண்கள் வேட்டி, சட்டை, முழுகால் பேன்ட், சட்டை, ஷர்வாணி உடுத்தலாம். கைலி, அரைக்கால் பேன்ட் போன்றவற்றை உடுத்தி வரக் கூடாது. பெண்கள் சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், பஞ்சாபி உடை அணிந்து வரலாம். டி-ஷர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போன்றவற்றை அணியக் கூடாது. துப்பட்டா அணியாமல் குர்தா மேல் சட்டை மட்டும் அணியக் கூடாது. கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் ஓரிரு நாளில் வைக்கப்பட உள்ளது. நேற்று கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள், பக்தர்களிடம் இந்த உடை கட்டுப்பாடுகள் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.