

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி நாளான நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒரே கல்லால் ஆன நந்தியம் பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ தினத்தன்று பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த பிப்.5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து 2-வது பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு பால், எண்ணெய் ஆகியவற்றால் மட்டுமே அபிஷேகம் நடைபெற்றது.
பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நாள் முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மகா சிவராத்திரியும், பிரதோஷ வழிபாடும் ஒரே நாளில் வந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்தியம் பெருமானை தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், திருவைக்காவூர் வில்வனேஸ்வரர் கோயில், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், ஆதிகும்பேஸ்வரன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3 மணி என நான்கு கால அபிஷேகம் நடைபெற்றது.
பாபநாசம் ராமலிங்க சுவாமி கோயிலில் உள்ள 108 சிவலிங்கங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.