'கால்நடைகள் குறைந்ததால் வாசலில் தெளிக்க சாணம் கிடைக்காமல் பெண்கள் சண்டை': அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் கலகலப்பு

'கால்நடைகள் குறைந்ததால் வாசலில் தெளிக்க சாணம் கிடைக்காமல் பெண்கள் சண்டை': அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் கலகலப்பு
Updated on
1 min read

‘‘கால்நடைகள் குறைந்ததால் வாசலில் தெளிக்க சாணம் கிடைக்காமல் பெண்கள் சண்டையிடும் நிலை உள்ளது,’’ என அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை அருகே நடந்த மனுநீதி முகாமில் பேசியதால் கலகலப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே மாங்குடி தெற்குவாடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மனுநீதி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:

கல்வியில் சிவகங்கை மாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது.

மருத்துவர்கள், ஐஏஎஸ் ஆனவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும் இளைஞர்கள் குற்றச் சம்பவங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் பெற்றோர் நல் வழிப்படுத்த வேண்டும்.

விவசாயம் பொய்த்துவரும் நிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வீடுகளில் அதிகளவில் கால்நடைகள் வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது கிராமங்களில் கூட கால்நடைகள் குறைந்துவிட்டன. இதனால் காலையில் வாசல் தெளிக்க சாணம் கிடைக்காமல் பெண்கள் சண்டையிடும் சூழ்நிலை உள்ளது, என்று பேசினர்.

அமைச்சர் பேச்சைக் கேட்டதும் அங்கு கலகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அமைச்சர் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார். குடிநீர், உணவுகளை பார்வையிட்ட அவர், கட்டிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் அருண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in