

கொடைக்கானல் மலைகிராமங்களில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமித்தவர்களின் நில உரிமையை ரத்து செய்த கொடைக்கானல் கோட்டாட்சியர் சுரேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவர் தற்போது குடியாத்தம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓராண்டுக்கு முன்பு கோட்டாட்சியராக பொறுப்பேற்றவர் சுரேந்திரன். இவர், கொடைக்கானலில் பட்டா வழங்குவது, மாற்றம் செய்வதில் நடந்த பல்வேறு முறைகேடுகளைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவந்தார்.
இதில் கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை டி.கே.டி., நிலங்கள் (நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிலம்) என்ற பெயரில் போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளவர்களின் நில உரிமையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன்மூலம் 530 ஏக்கர் போலி பட்டா ரத்து செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். மேலும் ஆயிரக்கணக்கான அரசு நிலங்கள் போலி பட்டாக்கள் மூலம் தனியாருக்கு தாரைவார்த்ததை கண்டறிந்து அவற்றையும் ரத்து செய்ய நடவடிக்கையில் இறங்கினார்.
இதற்கு துணைபோன வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர், நிலஅளவையர், கிராமநிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனால் தவறு செய்த வருவாய்த்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
போலி பட்டாக்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோட்டாட்சியர் சுரேந்திரன் பரிந்துரை செய்தார்.
தவறு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதநிலையில், கொடைக்கானல் கோட்டாட்சியர் சுரேந்திரன் புதிய வருவாய் கோட்டமாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.
இருந்தபோதும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர் சுருக்க திருத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், கோட்டாட்சியர் வாக்காளர் பதிவு அலுவலர் என்பதால் இவரை இடமாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டநிலையில், கொடைக்கானல் கோட்டாட்சியர் பணியில் இருந்து சுரேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதிலாக கோட்டாட்சியர் நியமிக்கப்படும்வரை, கூடுதல் பொறுப்பாக கொடைக்கானல் கோட்டாட்சியராக திண்டுக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்குமார் மேற்கொள்ள திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.