Last Updated : 21 Feb, 2020 03:52 PM

 

Published : 21 Feb 2020 03:52 PM
Last Updated : 21 Feb 2020 03:52 PM

நெல்லையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், "திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பூப்பருவத்திலிருந்து அறுவடை ஆகும் நிலை வரை உள்ளது.

ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உர விற்பனையைக் கண்காணித்திடும் பொருட்டு வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய பயன் கிடைக்கும் வகையில் இம்மாவட்டத்தின் 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 24 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையங்களில் இதுவரை 1224 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நலன் கருதி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 232 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இம்மாதம் வரை 1445 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் 1402 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. 54 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 52 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது தரக்குறைவான விதைகள் 41.4 மெ.டன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு விற்பனைத்தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 23.048 லட்சம் ஆகும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் எழுப்பினர். களக்காடு வட்டாரத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டில் 263 விவசாயிகள் நெற்பயிர் காப்பீடு செய்திருந்தனர்.

அவ்வாண்டு வறட்சி ஏற்பட்டதால் திருநெல்வேலி மாவட்டம் வறட்சி மாவட்டமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதற்கான பதிலும் தரப்படவில்லை. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாய பிரதிநிதி பி. பெரும்படையார் வலியுறுத்தி பேசினார்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியர், இழப்பீடு கிடைக்காக விவசாயிகளின் பட்டியலை அளித்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், உரிய அறிவிப்பு பலகைகளை வைத்து, அதில் நெல் கொள்முதலுக்கான அரசின் விதிமுறைகளையும், விலை விவரங்களையும் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வட்டம் ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த பி. சொரிமுத்து கேட்டுக்கொண்டார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் இத்தகைய அறிவிப்பு பலகைகளை வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஆட்சியர் உறுதி தெரிவித்தார். அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவான இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆட்சியர் பதில் தெரிவித்தார்.

நெல் அறுவடை தொடங்கவுள்ள நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது குறித்தும் விவசாயிகள் தெரிவித்தனர். தனியாரிடம் அதிக வாடகைக்கு இயந்திரங்களை அமர்த்த வேண்டியிருப்பதால் அறுவடை இயந்திரங்களை வேளாண்மை பொறியியல்துறை அதிகம் வரவழைத்து விவசாயிகளுக்கு பயன்படும்படி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

மானூர் தெற்குபட்டியில் நெற்பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவது குறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு வனத்துறையினர் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்துக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பெருங்கால் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் எஸ். பாபநாசம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த ஆட்சியர், அணையில் நீர் இருப்பை கணக்கில் கொண்டே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேவைக்கு அதிகமாக இருந்தால் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலும், மேலாண்மை முறைகளும் தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஷ் நாரணவரே, வேளாண்மை துறை இணை இயக்குநர் கிருஷ்ணன்பிள்ளை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அற்புதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x