Published : 17 May 2014 08:41 AM
Last Updated : 17 May 2014 08:41 AM

உயர்நிலைக் குழுவைக் கூட்ட திமுக முடிவு: அழகிரி மற்றும் திமுக விசுவாசிகளுக்கு மீண்டும் இடம்?

கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட படுதோல்விக்கான காரணம் குறித்து ஆராய உயர் மட்டக் குழுவைக் கூட்டி ஆலோ சனை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக திமுக பொதுச்செயலாளர் க.அன் பழகனுடன், திமுக தலைவர் கருணாநிதி தனியாக ஆலோசனை நடத்தினார். அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து உள்ளனர்.

ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. இந்த எதிர்பாராத தோல்வி, திமுக தலைமையை மிகவும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட திமுக, நாடாளுமன்றத்தில் மிக மோச மான தோல்வியை பெறுவது, இது நான்காம் முறையாகும். ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் இருப்பது மூன்றாவது முறையாகும்.

கடந்த 1977-ம் ஆண்டில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு இடங்களில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. பின்னர் 1989-ம் ஆண்டு தேர்தலில், திமுக 31 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடம்கூட வெற்றி பெறா மல் தோல்வியடைந்தது. இதை யடுத்து 1991-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டபோது 30 இடங்களில் திமுக போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெற வில்லை.

இந்நிலையில், தற்போது மூன்றாம் முறையாக திமுக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இதுகுறித்து அன்பழகனுடன் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இதில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அல்லது செயற் குழுக் கூட்டத்தைக் கூட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

திமுகவிலிருந்து அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது முதல், வேட்பாளர் கள் தேர்வு வரை நடந்த குளறு படிகளை, திமுக தலைவர் கருணா நிதியும், பொதுச் செயலாளர் அன் பழகனும் ஆலோசித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாததற்கு திமுகவி லிருந்து அழகிரி நீக்கப்பட்டதும், 2ஜி ஊழல் குற்றச்சாட்டும், திமுகவின் கோஷ்டிப் பிரச்சினையும், வேட்பாளர்கள் தேர்வால் ஏற்பட்ட அதிருப்தியும் காரணம் என திமுக தலைமை கண்டறிந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் அதிமுக உள்பட வேறு கட்சி களிலிருந்து வந்த பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட நிர்வாகப் பதவி களை மாற்றிவிட்டு, திமுகவின் கடந்த கால விசுவாசிகளுக்கு மீண்டும் பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலைக் கூட்டம் கூடி திமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்டாலின் பதவிக்கு ஆபத்தா?

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் முழுமையான நேரடிக் கட்டுப்பாட்டிலும், முடிவின் பேரிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலை திமுக சந்தித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கி, அனைத்து முடிவுகளையும் எடுத்தார். அதிலும் திமுகவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது. தற்போதும் படுதோல்வியை திமுக சந்தித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கிடைக்கலாம் என்று திமுகவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அவரது பொருளாளர் பதவியே நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் மாற்றியதும், திமுகவின் மற்ற முக்கிய நிர்வாகிகள் குறிப்பாக கனிமொழி போன்றோர் பிரச்சாரத்துக்கு சென்றபோது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு தராதது போன்றவையும், ஸ்டாலினின் நிர்வாகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x