அவிநாசி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக; கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி::கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி::கோப்புப்படம்
Updated on
1 min read

அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப்.21) வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசுக்குச் சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட சொகுசுப் பேருந்துடன் கண்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்பதிலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் காலம் தாழ்ந்துதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

மேலும், நெடுஞ்சாலை விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை இடத்தை பெற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதற்குரிய காரணத்தைத் தமிழக அரசு ஆய்வு செய்து அதனை களைவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in