

தமிழகத்தில் ஆவின் இயக்குநர்கள் தேர்தல் தொடர்பாக மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பி.பெரியகருப்பன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் உள்ளடங்கிய மதுரை ஆவினுக்கு 15.12.2018-ல் தேர்தல் நடத்தப்பட்டு நான் உட்பட 17 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டோம்.
இந்நிலையில் மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்ட ஆவின் தனியாக 22.8.2019-ல் பிரிக்கப்பட்டது.
மதுரை ஆவின் இயக்குநர்கள் 17 பேரில் நான் உட்பட 11 பேர் மதுரை ஆவின் இயக்குனர்களாகவும், 6 பேர் தேனி இயக்குனர்களாகவும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை ஆவினுக்கு தேர்தல் நடத்தாமல் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழரசன் மதுரை ஆவினுக்கு உட்பட்ட 11 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இல்லை. வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவரது நியமனத்தை ரத்து செய்து, தேர்தல் நடத்தி நிர்வாகக்குழுவை தேர்வு செய்யவும், அதுவரை ஆவின் நிர்வாகத்தை பொதுமேலாளர் கவனிப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு தேர்தல் ஆணையம் 11.2.2020-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை ஆவினுக்கு 17 இயக்குனர்களை தேர்வு செய்யக்கூறப்பட்டுள்ளது.
மதுரை ஆவினில் ஏற்கனவே நான் உட்பட 11 இயக்குனர்கள் உள்ளோம். எங்கள் பதவி காலம் 14.12.2023-ல் தான் முடிகிறது. இதனால் மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குனர் பதவிகளுக்கு தான் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 11 இயக்குனர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம்.
எனவே, கடந்த 15.12.2018-ல் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தும், ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் தொடர்பாக மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் 11.2.2020-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், மதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குனர் பதவியிடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், "தமிழகத்தில் 7 ஆவின்கள் இருந்தது. தற்போது அவை 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஆவின் நிர்வாகங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அனைத்து இயக்குநர்களையும் தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்றார்.
இதையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.