Published : 21 Feb 2020 02:22 PM
Last Updated : 21 Feb 2020 02:22 PM

பொதுமக்களுக்கு இடையூறாக டிக் டாக்: கல்லூரி மாணவர் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பொது இடங்களில் டிக் டாக் வீடியோ வெளியிட்டுக் கிண்டல் செய்துவந்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

டிக் டாக் செயலி வந்தபின் டப்ஸ்மாஷ் பேசி, நடித்தவர்கள் தங்கள் திறமைக்குத் தீனிபோடும் ஒன்றாகக் கருதி அதில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கி வீடியோ போட ஆரம்பித்தனர். சினிமா பாட்டுக்கு நடனம், வாயசைத்தல், வசனம் பேசி நடித்தல், தனி நபர் சாகசம், கிரியேட்டிவ் செயல்களைச் செய்தல், நகைச்சுவை எனப் பல்வேறு விஷயங்களைப் பலரும் செய்து வருகின்றனர்.

தங்கள் திறமையை வெளிப்படுத்த சினிமாவில் சான்ஸ் தேட, தங்களை மற்றவர்கள் பாராட்டி லைக் போட டிக் டாக் செயலியைப் பலரும் பயன்படுத்துகின்றனர். இதில் தங்கள் திறமையைக் காட்டுகிறேன் எனத் திருமணம் ஆன பெண்கள், இளம்பெண்கள் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடிப் பதிவிட, அதைப் பாராட்டுகிறேன் என்கிற சாக்கில் நட்பு பிடித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அதன் மூலம் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டு கொலையில் போய் முடிந்த குற்றச் செயல்களும் உள்ளன.

டிக் டாக் மூலம் தேசவிரோதக் கருத்துகள் கூறுவது, போலீஸை மிரட்டுவது, கண்ணியத்தைக் குறைப்பது, ரவுடியிசத்தை ஊக்குவிப்பது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாடல் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கி கம்பி எண்ணுகின்றனர்.

இதில் ஈடுபடுவது ஒருவகை மனோ வியாதியாகப் பார்க்கப்படுகிறது. ஆபாசமாக நடனம், அச்சுறுத்தும் செயல்கள், தனி நபர் சாகசம் என்று டிக் டாக் வீடியோ போடுவதன் மூலம் பலரும் சொந்தமாகத் தங்களுக்குத் தாங்களே இன்னலை இழுத்துவிட்டுக்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ஆனாலும் பலரும் இதில் தங்கள் அசாத்திய திறமையைக் காட்டுவது, பொதுமக்களுக்கு உதவும் தகவல்களைக் கூறுவது, நகைச்சுவை, அச்சு அசலாக நடிகர்கள்போல் நடிப்பது என்று பதிவிட்டு பாராட்டையும் பெறுகின்றனர். சமுதாயம் அனைத்தும் கலந்த கலவை என்பதற்கு டிக் டாக் சிறந்த உதாரணமாக உள்ளது.

இதில் டிக் டாக் மூலம் லைக்குகளை அள்ள, சாகசம் செய்யும் ஆர்வக்கோளாறான இளைஞர்களும் உள்ளனர். அதில் ஒருவர்தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் கண்ணன். இவர் சினிமா பாட்டுக்கு நன்றாக நடனமாடக்கூடியவர். ஆனால், அவர் நடனமாடி வீடியோ வெளியிடவில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொதுவெளியில் அவர்கள் முன் சென்று குதித்து மிரளவைத்து அவர்களைச் சுற்றி நடனமாடுவது, அவர்களுக்கு தொல்லை தந்து அதைக் காட்சிப்படுத்துவது என்று ஆரம்பித்துள்ளார்.

அதற்கு லைக்குகள் அள்ள அதில் மகிழ்ச்சி அடைந்தவர், மேலும் மேலும் அதேபோன்று வீடியோக்களைப் போடுவதும், வாகனங்கள் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும்வண்ணம் பாட்டுப் பாடி டிக் டாக் வீடியோ போடுவதுமாக இருந்தார். இதை அவரது தளத்தில் கூட்டு டூயட்டுகளாக வரவேற்றுப் பலரும், கண்டித்து சிலரும் பதிவிட்டிருந்தனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்த இளைஞர் மீது எஸ்.பி .அருண் சக்திகுமாரிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுத்த எஸ்.பி. உத்தரவிட்டார். சைபர் பிரிவு போலீஸார் கண்ணனின் டிக் டாக் ஐடியை ஆய்வு செய்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி அடுத்த ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து வடகாடு போலீஸாருக்கு தகவல் சொல்ல, அவர்கள் கண்ணனைக் கைது செய்தனர். அவர் மீது பொது இடங்களில் அநாகரிகமாக நடத்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பொதுமக்களை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் கல்லூரி மாணவர் என்பதாலும் முதன்முறை பின் விளைவுகள் தெரியாமல் செய்ததாலும் சொந்த ஜாமீனில் அந்த மாணவரை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.

அவரது பக்கத்தில் அந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டாலும், அவருடன் இணைந்து காணொலி வெளியிட்ட அனைவர் பக்கத்திலும் அந்த வீடியோ அழிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x