'இந்தியன்- 2' விபத்து எதிரொலி: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனங்களோடு மட்டுமே பணியாற்றுவோம்: பெப்சி தீர்மானம்

'இந்தியன்- 2' விபத்து எதிரொலி: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனங்களோடு மட்டுமே பணியாற்றுவோம்: பெப்சி தீர்மானம்
Updated on
1 min read

'இந்தியன்-2' படப்பிடிப்பு விபத்தை அடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிறுவனங்களோடு மட்டுமே தொழிலாளர்கள் பங்கேற்போம் என பெப்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

'இந்தியன் 2' படப்பிடிப்பு நேற்று முன் தினம் பூந்தமல்லி இவிபி மைதானத்தில் நடந்தது. இரவு 9.30 மணி அளவில் பெரிய வெளிச்சம் கொடுக்கும் லைட்டுகளைத் தாங்கி நின்ற கிரேன் ஒருபுறமாகச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக லைகா,கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர், ப்ரொடக்‌ஷன் மேனேஜர் உள்ளிட்டோர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் காரணமாக சினிமாவில் பணியாற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

பிரம்மாண்டமாக படம் எடுக்கும் நிறுவனங்கள் பல கருவிகளை, பிரம்மாண்ட செட்களைப் போடும்போது அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, இன்சூரன்ஸ், விபத்துக்குப் பின் அவர்களது மறுவாழ்வு, சிகிச்சை செலவு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியே?

இதற்கு முன்னரும் 'காலா' படப்பிடிப்பு, 'பிகில்' படப்பிடிப்பில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்குப் பின் பெப்சி நிறுவனம் சில முடிவுகளை நேற்று எடுத்துள்ளது. அதன்படி இரண்டு முக்கிய தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

* இனி சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு நிறுவனங்களோடு மட்டுமே ஊழியர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.

* தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் உருவாக்கி நடை முறைப்படுத்தப்படும். பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்த இரண்டு தீர்மானங்களை பெப்சி நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in