Published : 21 Feb 2020 11:45 AM
Last Updated : 21 Feb 2020 11:45 AM

போர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா?-அன்புமணி கேள்வி

அன்புமணி ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

போர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி செய்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (பிப்.21) வெளியிட்ட அறிக்கையில், "ஈழத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், போர்க்குற்ற விசாரணையிலிருந்தே விலகிக் கொள்வதென இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிட்ட நிலையில், இந்தியா ஈழத் தமிழர்களுக்காகக் களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஈழப் போரில் ஒன்றரை லட்சத்துக்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்களைத் தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி இலங்கைப் படைகள் கொன்று குவித்தன. கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக பாமக, பசுமைத் தாயகம் மற்றும் ஈழத் தமிழர் அமைப்புகள் மேற்கொண்ட முன்னெடுப்புகளின் பயனாக, ஈழப் போர் குறித்த போர்க்குற்ற விசாரணைக்கு 2014-ம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணையம் ஆணையிட்டது.

அதன் ஆணையர் தலைமையில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில், போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக வெளிநாட்டு நீதிபதிகளும், இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைத்து போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்படி ஐநா மனித உரிமை பேரவையில் 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன் பின்னர் 5 ஆண்டுகளாகியும் இன்று வரை நீதிமன்ற விசாரணை நடத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் தான் வரும் 24-ம் தேதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 43-வது கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக ஐநா மனித உரிமை ஆணையர் தயாரித்துள்ள இடைக்கால அறிக்கையில், 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போர்க்குற்றம் குறித்த தீர்மானத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 25 தீர்வு நடவடிக்கைகளையும் இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், அவற்றைச் செயல்படுத்த வேண்டிய இலங்கை அரசோ, நேற்று அவசரம், அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, போர்க்குற்ற விசாரணை குறித்த ஐநா மனித உரிமை ஆணையத் தீர்மானங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது இலங்கை போர்க்குற்ற விசாரணைக்குப் பின்னடைவாகும்.

ஈழப் போர் நடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே போர்க்குற்ற விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த இலங்கை அரசு, இப்போது விசாரணையிலிருந்து முழுமையாக வெளியேறத் துடிப்பதற்கு காரணமே, போர்க்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர்களே இப்போது இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஏற்றிருப்பதுதான்.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச இப்போது பிரதமராகியுள்ளார்; பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்ச அதிபராகியுள்ளார். போரின்போது 53-வது படையணியின் தலைவராக இருந்த கமல் குணரத்னே இப்போது பாதுகாப்புத்துறை செயலாளராகவும், 58-வது படையணியின் தலைவராக இருந்த ஷவேந்திர சில்வா போர்ப்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போர்க் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தண்டிக்கப்படும் என்பதால், அதிலிருந்து தப்புவதற்காகவே போர்க்குற்ற விசாரணையைச் சீர்குலைக்க கோத்தபய ராஜபக்ச நிர்வாகம் துடித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைப் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தமிழர்களின் பகுதிகளிலிருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை; நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. கோத்தபய அதிபரான பிறகு மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் அதிகரிக்குமே தவிர, நீதி நிலைநாட்டப்படாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த போர்க் குற்றவாளிகள் தப்பிவிடாமல் இந்தியா தடுக்க வேண்டும். இலங்கை போர்ப்படை தளபதியான ஷவேந்திர சில்வா ஒரு போர்க் குற்றவாளி என்று கூறி அவரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டதன் மூலம், ஈழத் தமிழருக்கு நீதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தியாவும் ஈழத் தமிழர்கள் மீதான அதன் அக்கறையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதன்படி, ஐநா மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையை வரும் 27-ம் தேதி மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் விவாதத்தில், இலங்கை போர்க்குற்ற விசாரணையை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும். விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன், போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; போர்க்குற்றங்களை விசாரித்து ஆவணப் படுத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நட்பு நாடுகளுடன் இணைந்து ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முடித்துவைக்க வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் இலங்கை கொண்டுவந்தால், இந்தியா அதற்கு எதிராக வாக்களித்து முறியடிக்க வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x