

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக் கப்பட்டுள்ள பகுதிகளில் உருக்காலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர் பான பணிகளை மேற்கொள்ளவும், அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முதல்வர் தலைமையில் அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். அதில் துணை முதல்வர், அமைச்சர்கள், துறைகளின் செயலர்கள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
உணவு பாதுகாப்புக்கான உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல், வேளாண் சார்ந்த தொழிலகங்களின் மேம்பாட்டை எளிதாக்குதல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் காடுகள் வளர்ப்பு மற்றும் சமூக காடு வளர்ப்பை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை வகுத்தல், அந்த திட்டங்களுக்காக நிதி திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை இந்த அதிகார அமைப்பு மேற்கொள்ளும்.
புதிய திட்டங்கள் கூடாது
மேலும், எந்த ஒரு நபரும் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு, அலுமினியம் உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஹைட்ரோ கார்பன்களை உள்ளடக்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற் றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற் சாலை தொடர்பான எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயல்பாட்டையோ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேற் கொள்ளக்கூடாது.
இந்த சட்டம், நடைமுறைக்கு வரும் முன்பு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல் பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதிக்காது. இப்பகுதிகளில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் பிற பயன்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் இந்த சட்டம் பாதிக்காது. சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம், தொடர்ந்து மீறப்பட்டால் ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.