

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பகிரங்க குற்றச்சாட்டை அடுத்து திருவண்ணாமலையில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 5 கஞ்சா வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது” என குற்றம்சாட்டினார்.
இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை நகர போலீஸார் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன், ஏழுமலை, அப்பாஸ், முருகன் மனைவி பாக்கியம், கதிர்வேல் மனைவி செல்வி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 5 கஞ்சா வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடத்தி வந்தவர் கைது
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணாமலை அண்ணா நகர் 9-வது தெருவைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தாண்டில், இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என கூறியுள்ளார்.