

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமைச் சட்டம் குறித்து வதந்திபரப்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: 2020 என்பிஆரில் கூடுதலாக தாய்மொழி, தந்தை, தாய், துணைவி விவரங்கள், பிறந்த இடம், பிறந்த தேதி,ஆதார், கைபேசி எண், வாக்காளர்அடையாள அட்டை எண், ஓட்டுநர்உரிமம் எண் ஆகியவை கேட்கப்பட்டுள்ளன. இவை குறித்துதான் அச்சம் பரப்பப்படுகிறது.
2020 என்பிஆரில் கேட்கப்படும் விவரங்களுக்கு ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை. மதம் குறித்து எந்த விவரமும் பெறப்படுவதில்லை. 2020 என்பிஆர் படிவத்தில் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு மத்தியஅரசுக்கு கடிதம் அனுப்பியுள் ளோம். தமிழகத்தில் என்பிஆர்புதுப்பிக்கும் பணி நடைபெறும்தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
மு.க.ஸ்டாலின்: முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒருவகையில் என்பிஆர் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. என்பிஆர் படிவத்தில் பெற்றோர் பிறந்தஊர், பிறந்த தேதி கேட்கப்பட்டுள்ளது. இவை இல்லாவிட்டால் கொண்டாடும் பண்டிகைகளின் பெயர்கள் கேட்கப்படுகின்றன.
இதில் முஸ்லிம் பண்டிகைகள்இல்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டால் சந்தேகத்துக்குரியவர் என்று குறிப்பிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவேதான், என்பிஆர் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடைபெறாது என்று முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:குடியுரிமைச் சட்டத்தால் தமிழகத்தில் பிறந்த ஒருவருக்குக்கூட குறிப்பாக முஸ்லிம்களுக்கு எள்முனையளவும் பாதிப்பு வராதுஎன்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். 30 ஆண்டுகால அதிமுகஅரசு சிறுபான்மை மக்களுக்கு காவல் அரணாக இருந்து வந்துள்ளது. முஸ்லிமாக பிறந்திருந்தால் நானும் போராட்டக் களத்தில் இருப்பேன். அந்த அளவுக்கு அச்சமூட்டும் வகையில் உண்மையற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.
வதந்தியை பரப்புபவர்கள் பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் இருப்பவர்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக இப்படி விஷ விதைகளை பரப்புகிறார்களோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: பெற்றோர் பெயர்களைக் குறிப்பிடாவிட்டால் பண்டிகைகளை கேட்கிறார்கள். இதில்தான் சிக்கல். என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருக்கும்போது வாக்கு வங்கிக்காக பேசுவதாக கூற வேண்டாம்.
ஆர்.பி.உதயகுமார்: 2003-ல் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான் என்பிஆர், தேசிய அடையாள அட்டை வழங்கஏதுவாக குடியுரிமைச் சட்டம் 1955-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதுபோல 2010-ல் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. திமுக அச்சம் தெரிவித்திருந்தால் அப்போதே இது தடுக்கப்பட்டிருக்கும்.
பாவம் செய்தது எல்லாம் நீங்கள். ஆனால், பழியை மட்டும் எங்கள் மீது சுமத்துகிறீர்கள். தாயாக பிள்ளையாக பழகி வருகிறோம். வாக்கு வங்கிக்காக எதிர்காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவாக்கி விடுவீர்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: மதம் குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் நீண்டஆராய்ச்சி நடத்துகிறார். நாங்கள்ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி,பொங்கல் என்று அனைத்து பண்டிகையையும் கொண்டாடுபவர்கள்.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
அதைத் தொடர்ந்து குடியுரிமை சட்டம், என்பிஆர் குறித்து அமைச்சரின் விளக்கத்தை கண்டித்தும், 11 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க பிரச்சினையை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பட்ஜெட் விவாதத்தின் மீதான பதிலுரையை புறக்கணித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.