

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத் துதல்' சட்ட மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திடும் நோக்கில், சட்டப்பேரவையில் தமிழகஅரசு, ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்' சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங் களுக்கு கொடுத்த அனுமதி தொட ருமா என்ற தெளிவு புதிய சட்டத்தில் இல்லை. பல்வேறு தரப்பினரும் சந்தேகித்ததைப் போலவே தெளிவில்லாத சட்டத்தை முதல்வர் பழனிசாமி கொண்டுவந்துள்ளார். தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல நம்ப வைத்து அரசு மீண்டும் ஏமாற்றி இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன்: எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்தியஅரசு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசிநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவில்லை எனில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்புவேளாண் மண்டலம் என்பதுநடைமுறையில் அர்த்தமற்றதாகி விடும். இது தொடர்பாக மசோதாவில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை. எனவே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சட்டப்பேரவையில், காவிரிடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகை செய்யும் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்' சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமுமே வளர்ச்சிப் பாதையில் செல்லும். இந்தமசோதாவை நிறைவேற்றிய அதிமுக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்: விவசாயம் என்பதே கைவிடப்பட்ட தொழில் என்ற சூழல் நிலவும் வேளையில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாயத் துறை மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கும், தக்க ஆலோசனை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.