இன்று சர்வதேச தாய்மொழி தினம்: பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

இன்று சர்வதேச தாய்மொழி தினம்: பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Updated on
1 min read

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று (பிப்.21) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1952-ம் ஆண்டு, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவில் வங்கதேச மொழியைஆட்சி மொழியாக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்கள் சிலர்உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தாய்மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாணவர்களின் நினைவாக 2000-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேசதாய்மொழி தினம் கொண்டாப்படுகிறது.

இதற்கிடையே 2013-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சுவழக்கில் இருப்பதும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அழியும் தருவாயில் இருப்பதும் கண்டறியப்பட்டன. இதையடுத்து அனைத்து மொழிகளையும் பாதுகாக்க ஏதுவாக தாய்மொழி தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, இன்று (பிப்ரவரி 21) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த தினத்தில் சொற்பொழிவு, விவாதம், பாட்டு, கட்டுரை, ஓவியம், இசை, நாடகம், கண்காட்சிகள் என பல்வேறு வடிவங்களில் தாய்மொழியைக் கொண்டாட உள்ளனர்.

மேலும், இதர இந்தியமொழிகளின் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் மொழி ஆர்வலர்கள் சார்பில் பிரத்யேக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகரமுதலி திட்டம்

உலக தாய்மொழி நாளான இன்று (பிப்.21) அகரமுதலித் திட்ட இயக்குநரகமும், அடையாறு மாணவர் நகலக் குழுமமும் இணைந்து வணிக நிறுவனங்களில் தூயதமிழ்த் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளன. இதன் தொடக்க விழாசென்னை அடையாறு பேருந்து நிலையம் எதிரே உள்ள மாணவர்நகலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அகரமுதலி இயக்குநர் தங்க.காமராசு, அடையாறு மாணவர் நகலகக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சா.அ.சவுரிராசன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். அதன்படி ஒவ்வொருமாதமும் 21-ம் தேதி மாணவர்நகலகக் கிளைகளில் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்கள் தூய தமிழில் மட்டுமே பேசுவார்கள் எனவும் நிர்வாக இயக்குநர் சவுரிராசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in