Published : 21 Feb 2020 06:45 AM
Last Updated : 21 Feb 2020 06:45 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான மசோதாவைக் கூட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வெளிநடப்பு செய்தது வருத்தமாக உள்ளது: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கருத்து

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான மசோதாவைக்கூட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வெளிநடப்பு செய்தது வருத்தமாக உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று தாக்கல் செய்தார். அதன் மீது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்து மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற்ற பதில் என்ன? அதிகார அமைப்பில் எம்.பி,க்கள், எம்எல்ஏக்களுக்கு ஓராண்டு பதவிக்காலம் ஏன்? திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுபட்டதற்கு என்ன காரணம்? விவசாயப் பிரதிநிதிகள் இந்த வேளாண் மண்டலத்துக்குள் இருக்கிறார்களா? வேளாண் மண்டலத்துக்குள் ரியல் எஸ்டேட் தடை செய்யப்படுமா? நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வேளாண் மண்டலமாக இருக்க வேண்டும் என்பதால், இதை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

முதல்வர் பழனிசாமி: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்.9-ம் தேதி அறிவித்த நிலையில், மறுநாளே இதுதொடர்பான சட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். எனதுகடிதத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிப்.19-ம் தேதி அனுப்பியபதிலில், ‘கடந்த ஜன.16-ம் தேதிமத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, மாநில அரசின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது. குறிப்பிட்ட பகுதியில் எந்த ஒரு திட்டத்தை அனுமதிப்பதும், நிராகரிப்பதும் மாநில அரசின் முடிவைப்பொறுத்தது’ என்று தெரிவித்துள்ளார். எம்எல்ஏ, எம்.பி.க்கள் பதவி இழந்தால் அதிகார அமைப்பில் தொடர முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பதவியில் தொடர்ந்தால் காலம் நீட்டிக்கப்படும்.

திருச்சி, கரூர், அரியலூர் பகுதிகள் தொழிற்சாலை நிறைந்த, பாதிப்புக்குள்ளாத பகுதிகள் என்பதால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள்தான் அதிகாரஅமைப்பில் இடம் பெறுவர். சொந்தநிலங்களை விற்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதில் ரியல் எஸ்டேட் சேர்க்கப்படவில்லை. இந்த அமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்பு. பாதுகாப்பான சட்டம் என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. எனவே அனைவரும் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றித் தரவேண்டும்.

மு.க.ஸ்டாலின்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை திமுக வரவேற்கிறது. இருப்பினும் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி சந்தேகங்களை தீர்க்கலாம்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்: விவசாயம் மாநில பட்டியலில், மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தபோது, ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தை பாதிக்கும் திட்டங்கள் வரக்கூடாது என்பதுதான் நோக்கம். அதை நேரடியாக சட்டத்தில் சேர்த்தால் மத்திய அரசின் சட்டத்துடன் மோதும் நிலை வரும். எனவே, டெல்டா மாவட்டங்களில் விவசாயநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்த வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது. இந்தசட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் என்பது வேறு; எண்ணெய் கிணறு என்பதுவேறு. கடந்த 1958-ம் ஆண்டு டெல்டா பகுதிகளில் ஆய்வு தொடங்கப்பட்டு, அதன்பின் 1985-ல் நரிமண் பகுதியில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. அதை எதிர்த்து எந்த போராட்டங்களும் நடக்கவில்லை. ஆட்சேபணையும் இல்லை. தற்போது இப்பகுதியில், 31 எண்ணெய் எடுக்கும் உரிமங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. 40 ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கும், ஹைட்ரோ கார்பனுக்கும் சம்பந்தமில்லை.

தமிழகத்தில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. கடந்த 2011-ல் ஒரு நிறுவனத்துக்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் மக்கள் எதிர்ப்பால் தொழில்நுட்ப குழுவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். குழுவினரின் அறிக்கைப்படி உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், நெடுவாசலில் 2016-ம் ஆண்டு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனத்தினர் மத்திய அரசின் அனுமதியை பெற்றாலும், மாநிலஅரசின் உரிமத்தை பெற்றால்தான் ஆய்வு செய்ய முடியும். அதை தடுக்கத்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இதற்கான சட்டம் இல்லை. இதில் குறைகள் இருக்கலாம். அமல்படுத்தும்போது குறைகள் இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது.

தங்கம் தென்னரசு (திமுக): புதிதாக ஒரு நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைத்தால் அனுமதிக்கப்படுமா?

அமைச்சர் சண்முகம்: எதிர்காலத்தில் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலை ஆரம்பிக்கும்போது, அதுபற்றி முடிவு செய்ய அதிகார அமைப்புக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்படும் என்றால் அனுமதி அளிக்கப்படாது. சட்டத்தை முதலில் கொண்டுவருவோம். எதிர்க்கட்சிகள் சட்டம் குறித்து என்ன கருத்துகளை சொன்னாலும் ஏற்று செயல்படுத்துவோம்.

துரைமுருகன்: முதல்வர், சட்டத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தனர். இந்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகள், வல்லுநர்களின் கருத்துகளை பெற்று அதை சேர்ப்பதற்காக மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தேர்வுக் குழுவுக்கு அனுப்ப மறுப்பதை மட்டும் எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம். (இவ்வாறு கூறிவிட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்).

அதன்பின் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை. இந்த சட்ட மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்ட மசோதாவை டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதைக்கூட அரசியலாக்கி வெளிநடப்பு செய்துள்ளனர். இது வருத்தமாக உள்ளது.விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் ஆதரவு அளிக்காவிட்டாலும், விவசாயிகள் ஆதரவு அளிப்பார்கள்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x