Published : 20 Feb 2020 08:25 PM
Last Updated : 20 Feb 2020 08:25 PM

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு தமிழர்களுக்கு எதிரானது:  பேரவையில் ஸ்டாலின் 

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வகை செய்யும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே எதிரானது என ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று பேசியதாவது:

பேரவையில் இன்று (20.02.2020) சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியதன் விவரம் வருமாறு:

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு தனிநபர் தீர்மானத்தை ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தேன். ஆய்வில் இருப்பதாகக் கூறினீர்கள். நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இந்தக் கூட்டத்தொடரிலும் அது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அடிப்படையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்.

அந்தப் பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு இதே அவையில் பேசும்போது என்.பி.ஆர். கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று இந்த அரசுக்கு வலியுறுத்தி, வற்புறுத்தி ஒரு கோரிக்கை வைத்தேன். முதல்வரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று(19.02.2020) கூட சட்டமன்றத்தை முற்றுகையிடும் வகையில் ஒரு மாபெரும் பேரணி சென்னையில் நடைபெற்றதைக் கண்கூடாகப் பார்த்தோம். எனவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் இதே அவையில் முதலமைச்சர் அவர்கள் பேசும்போது இந்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.

அதற்கான காரணங்களைப் பட்டியலிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்.பி.ஆர். கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடைபெறாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது முதலில் நம்முடைய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த ஒரு காரணமே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு போதுமானதாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இலங்கைத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது இரண்டாவது காரணமாக அமைந்திருக்கிறது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்.பி.ஆர். தயாரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள புதிய படிவத்தில், பெற்றோரின் பிறந்த ஊர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. உரிய சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடும் பண்டிகைக் காலங்கள் குறித்துக் கேட்கப்படுகிறது. அந்தப் பண்டிகைப் பட்டியலில் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் இடம்பெறவில்லை.

இதுவே மதரீதியான பிரிவை, பிளவை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவல்களைத் தராதவர்களை, சந்தேகத்திற்கு உரியவர்களாக வகைப்படுத்தி ‘டி’ என்று குறிப்பிட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

தேசியக் குடியுரிமைப் பதிவேடு - என்.ஆர்.சி. -ஐத் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இந்த என்.பி.அரில் கேட்கப்படுகின்றன.

என்.ஆர்.சி., என்.பி.ஆர். இரண்டும் வேறல்ல, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு என யாரும் கருதிட வேண்டாம். தமிழர்கள் உட்படப் பலருக்கும் இது பல்வேறு பாதிப்புகளை நிச்சயம் உண்டாக்கப் போகிறது.

ஆகவே அரசியல் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் - சிஏஏவை திரும்பப் பெறும் தீர்மானத்தை நிறைவேற்றாத இந்த அரசு, இந்த என்பிஆர் கணக்கெடுக்கும் பணியைத் தமிழகத்தில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியையேனும் வழங்குமா? என்று கேட்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x