

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் செயல்பாடு குறித்து திமுக உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, ''விபத்தின்போது 108 ஆம்புலன்ஸை அழைத்தால் வெகு தாமதமாக வருகிறது. ஒருமணி நேரம்வரை ஆகிறது'' எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏவின் குற்றச்சாட்டை மறுத்தார். சர்வதேச நாடுகளில் ஆம்புலன்ஸ் அழைப்புக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்த கணக்கீடு உள்ளது. அதைக் காட்டிலும் தமிழகத்தில் ஆம்புலன்ஸ்கள் விரைவாக வருவதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகள் வருகின்றன. அவ்வாறு வரும் அழைப்புகளில் மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப் பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் அழைப்பு கிடைத்தவுடன் ஆம்புலன்ஸ் அந்த இடத்தைச் சென்று அடைவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், வருங்காலத்தில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் அது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அழைத்தவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக செயலி இருக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அந்தச் செயலி இரண்டு மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் 200 புதிய ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும், இதைத் தவிர ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சேவை வழக்கமான 108 என்கிற எண்ணாக இல்லாமல் தனியாக வேறொரு தொடர்பு எண் கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக 60 ஆம்புலன்ஸ்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.