Last Updated : 20 Feb, 2020 05:54 PM

 

Published : 20 Feb 2020 05:54 PM
Last Updated : 20 Feb 2020 05:54 PM

மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி போராட்டம்: மாணவர் கூட்டியக்கம் அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் வரும் 25 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக மாணவர் கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டியக்கம் சார்பில் இந்திய மாணவர் சங்க புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ், திமுக மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன், ஏஐஎஸ்எப் துணைத் தலைவர் முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்தன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 225 சதவீதக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் குறைக்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை அனைத்து பாடப்பிரிவுகளிலும் வழங்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக இயக்கப்பட்ட இலவசப் பேருந்து சேவையை ரத்து செய்யக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை இன்று 15-வது நாளாகப் போராடி வருகிறது.

இந்நிலையில் கட்டணத்தைக் குறைக்க நிர்வாகம் தரப்பில் போராடி வரும் மாணவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் உயர்த்திய கல்விக் கட்டண உயர்வை நியாயப்படுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது நாடு முழுவதும் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகங்களில் மிக அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டுமே. குறிப்பாக, திருவாரூரில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பை வழங்க இலவசப் பேருந்து வசதி ஏற்படுத்தியுள்ளது.

பிற பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.

எனவே, புதுச்சேரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்திடக் கோரி அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டியக்கம் சார்பில் வரும் 25-ம் தேதி லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்''.

இவ்வாறு மாணவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x