

இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 6, மார்ச் 7 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 3,004 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா மார்ச் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம் ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயத்திற்கு அனுப்பிய அழைப்பினை ஏற்று கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் அவர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து வியாழக்கிழமை ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் பங்குத்தந்தை தேவசகாயம் கூறியதாவது,
2020–ம் ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 6 வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 7 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன. மார்ச் 6 அன்று பிற்பகல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை இரவு தேர்பவனியும், மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.
இந்தியாவிலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்காக 77 விசைப்படகுகள், 25 நாட்டுப்படகுகள் அனுமதி பெறப்பட்டு 3,004 பயணிகள் செல்வதற்காக பதிவு செய்துள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களுக்குரிய ஆதார் அடையாள அட்டையையும், காவல் நிலையங்களில் பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் செல்ல அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை, என்றார்.
எஸ். முஹம்மது ராஃபி