Published : 20 Feb 2020 03:54 PM
Last Updated : 20 Feb 2020 03:54 PM

'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு; தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

திரைத்துறை ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப்.20) வெளியிட்ட அறிக்கையில், "சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் நடைபெற்றுக் கொண்டிருந்த 'இந்தியன் 2' சினிமா தயாரிப்பு நடவடிக்கையின்போது மூன்று ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். சிலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தோர் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அதேபோல காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான சிகிச்சையும், நிவாரணமும் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பல படப்பிடிப்புத் தளங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், மருத்துவ சிகிச்சை, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றில் போதிய அக்கறை காட்டப்படாத நிலை நீடித்து வருகிறது. சினிமா படப்பிடிப்பு உரிய காலத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கோடு அவசர அவசரமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை வழங்கப்படாமல் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதாக பரவலாகத் தகவல்கள் வருகின்றன.

இதேபோன்று படப்பிடிப்பு ஊழியர்களுக்குச் சொற்ப சம்பளமும், அந்த சம்பளமும் கூட உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையும் இருக்கிறது. பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடும், நட்சத்திர நடிகர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளமும் வழங்கும் திரைப்படத் தயாரிப்புகளில் கூட சாதாரண ஊழியர்களுக்கு உரிய சம்பளமும், குறித்த காலத்தில் சம்பளத்தை வழங்காத நிலையும் நீடிக்கிறது.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு திரைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு, சம்பளம், விபத்துத் தடுப்பு, நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் உரிய தீர்வு காண ஒரு உயர்மட்டக்குழுவை அமைத்து இத்தகைய பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கோர விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x