Published : 20 Feb 2020 03:30 PM
Last Updated : 20 Feb 2020 03:30 PM

ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்கள் பதவிப் பறிப்பு; ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது நடவடிக்கை இல்லை: ஸ்டாலின் விமர்சனம் 

என்பிஆர் சட்டத்தில் உள்ள சரத்துகளை நீக்கவேண்டும் என்று கேட்டால் வாக்கு வங்கிக்காகப் பேசுவதாகச் சொல்கிறார்கள். பாஜகவைப் பகைத்தால் ஆட்சி போகும், சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் அதிமுகவினர் அஞ்சி நடுங்குகிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

“11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதுகுறித்து அவையிலே இன்று கேள்வி எழுப்பினோம். இன்று பத்திரிகை ஒன்றில் தலையங்கத்தில் இதுகுறித்த கேள்வி வந்துள்ளது. ஒரு தீர்ப்பு பல கேள்விகள் என்று அந்தத் தீர்ப்பு பற்றி வந்துள்ளது.

அதில் ஆளுநரிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என கடிதம் கொடுத்ததற்கே பதவி நீக்கம் செய்த சபாநாயகர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்பும் விவகாரத்தில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் எதனால் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

18 எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் என்று ஆளுநரிடம் ஒரு மனு கொடுத்தார்கள். அவர்கள் அரசை எதிர்க்கவில்லை. அந்த விவகாரத்தில் சபாநாயகர் அவர்களை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்துவிட்டார். ஆனால் ஆட்சியே நீடிக்கக்கூடாது என்று எதிர்த்து வாக்களித்தவர்கள் 11 பேர். அவர்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் என்ன ஆயிற்று? அது உச்ச நீதிமன்றம் வரைபோய் சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். மணிப்பூர் மாநில விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கி உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஏதோ கொஞ்சம் பேசியதையும் நீக்கிவிட்டார்கள்.

அடுத்து சிஏஏ, அதுகுறித்து பலமுறை இந்த அவையில் எழுப்பியுள்ளோம், தனிநபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். ஆய்வில் இருக்கிறது என்று தட்டிக்கழித்தார்களே தவிர, அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் பலமுறை இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளோம்.

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, கண்டித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள். ஏன் நாடாளுமன்றத்தில் இதை ஆதரித்த பல கட்சிகள் பின்னர் அதை எதிர்த்து அவர்கள் மாநிலங்களில் முடிவெடுத்துள்ளன. அதேபோன்று தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் போடச் சொல்லிக் கேட்கிறோம்.

சரி அதுதான் போகட்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் கொண்டு வந்துள்ள சட்டம் என்பிஆர். அதையாவது தடுத்து நிறுத்துங்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று சொன்னேன். அதற்கு முதல்வர் பதிலளிக்காமல் வருவாய்த்துறை அமைச்சர் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதுபோல் வீராவேசமாகப் பேசினார். ஏதோ நாங்கள் வாக்கு வங்கிக்கு ஏங்குவதுபோல் நடப்பதாகப் பேசினார்.

ஒருவாதத்துக்கு வாக்கு வங்கிக்காக நாங்கள் பேசுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த அளவுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பேசுவதற்கு என்ன காரணம்? பாஜக ஆட்சிக்கு பயந்து, நடுங்கி, அஞ்சி ஆட்சி உடனே போய்விடும் என்கிற பயம். ஆட்சி போனாலும் பரவாயில்லை, அனைவரும் உடனடியாக சிறைக்குச் செல்ல வேண்டும். அவ்வளவு வண்டவாளங்கள் தண்டவாளத்தில் இன்று அங்கு ஏற்றி வைத்துள்ளனர்.

அதற்கு பயந்துகொண்டு அவர்கள் காலில் விழுந்து ஏற்றுக்கொண்டு போகிறார்களே தவிர மக்களைப் பற்றி இவர்களுக்குத் துளியும் கவலையில்லை”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x