Published : 20 Feb 2020 02:05 PM
Last Updated : 20 Feb 2020 02:05 PM

முறைகேடு புகார்; 8,888 பேரின் காவலர் தேர்வு நடைமுறைகள் நிறுத்திவைப்பு: உள்துறைச் செயலர், டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2019 மார்ச் மாதம் அறிவித்த தேர்வின் அனைத்து நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைச் செயலர், டிஜிபி, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த பிப்.2-ல் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியானது. இதில் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் வழங்கிய விதம், தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு பட்டியலிடப்பட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்துப் பதிலளிக்க தமிழக அரசு தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஒவ்வொரு தேர்விலும் இப்படி முறைகேடு நடப்பதாகத் தகவல் வெளிவருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் காவலர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து பங்கேற்பவர்கள் ஆயிரக்கணக்கில் எப்படி தேர்வாக முடிகிறது?

அதிலும் பெரும்பாலானோர் எப்படி ஒரே மாதிரியாக 69.5 என்ற மதிப்பெண் பெறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் தேர்வு அமைப்புகள் மீதான நம்பிக்கையே மக்கள் மனதில் தகர்ந்துவிட்டது. எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் எப்படி உடல் தகுதித் தேர்வில் அனுமதிக்கப்பட்டார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் சிபிஐ விசாரணை கோரினாலும், அரசு ஏதாவது சரியான விசாரணை முறையைக் கையாள வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தேர்வு எழுதுபவர்கள் யாரும் வசதி படைத்தவர்கள் அல்ல. நடுத்தர, ஏழை மக்கள்தான் பெரும்பாலும் அரசு வேலை பெறவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படித்து, தேர்வுகளை எழுதுகின்றனர்.

அப்படி உழைத்து படித்து தேர்வு எழுதியவர்களுக்கு என்ன மாதிரியான நியாயம் இங்கு கிடைக்கிறது? காவல்துறை தேர்விலும் இப்படி முறைகேடு நடக்கிறது என்றால், அதன் மூலம் காவல் பணியில் இவர்கள் சேர்ந்தால் காவல்துறை என்ன ஆகும்?” என தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, “கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வு நடைமுறைகளில் இதுபோன்ற முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு குறித்து ஒரு வார காலத்திற்குள் உள்துறைச் செயலர், டிஜிபி, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதுவரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ள 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

பின்னணி:

காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த பிப்.2-ல் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியானது. இதில் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் வழங்கிய விதம், தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடத்தி, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அன்பரசன், செல்வம் உள்ளிட்ட தேர்வு எழுதிய 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அவர்களது கோரிக்கை மனுவில், “காவலர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டதில் வேலூர் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள்.

தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.

இதை மாநில போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேர்வு நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, உள்துறைச் செயலர், டிஜிபி, தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x