

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெயர் தெரிந்த 25 பேர் மற்றும் பெயர் தெரியாத 7000 ஆண்கள் 5000 பெண்கள் என மொத்தம் 12 ஆயிரம் பேர் மீது 143, 341 என்ற இரு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் நேற்று பேரணி நடத்தினர். சென்னையில் நடந்த பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ம் தேதி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது சலசலப்பு ஏற்பட்டது. போலீஸார் மீது சிலர் கல்வீசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இந்நிலையில், ‘குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்த மாட்டோம்’ என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வலியுறுத்தி, 23 முஸ்லிம் அமைப்பினர் இணைந்து சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரணி மற்றும் போராட்டம் அமைதியான முறையில் கட்டாயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், நெல்லையில் நடந்த போராட்டம் தொடர்பாக 12,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறவிடாதீர்: