

பட்டா மாறுதல் மற்றும் இரு நிறுவனங்களில் இழப்பீடு பெற விண்ணப்பித்தல் போன்ற காரணங்களால் பயிர்க்காப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றது.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர்): பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பல மாவட்டங்களில் இழப்பீட்டுத் தொகை சரியாக கொடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில்கூட 150 பேருக்குபணம் வரவில்லை. இதுகுறித்து வேளாண் அதிகாரிகளை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும்.
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு: பயிர்க்காப்பீட்டுத் தொகைகளை அதிகளவில் வாங்கி விவசாயிகளுக்கு அளித்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.7,618 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
கே.ஆர்.ராமசாமி: விடுபட்டுள்ளவர்கள் இன்னும் உள்ளனர். அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் குளறுபடிகள் இல்லை. ஆனால், நிலத்தின் பட்டா பெயர் மாறுதல்இல்லாததால் குழப்பம் ஏற்படுகிறது. தந்தை பெயரில் பட்டா உள்ள நிலத்தை மகன்கள் பிரித்துக் கொண்டு விவசாயம் செய்துவரும் நிலையில், மகன்கள்தங்கள் பெயரில் பிரீமியம் தொகை செலுத்தும் நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பினாமி சொத்தா என்ற குழப்பம் எழுகிறது.இதில், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இது பினாமி சொத்து இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று காப்பீட்டு அதிகாரிகளிடம் வழங்கினால் இழப்பீடு கிடைக்கும்.
அதேபோல், கூட்டுறவு சங்கம் மூலம் பிரீமியம் செலுத்தி இழப்பீடு பெற்ற விவசாயிகள் சிலர்,தேசிய வங்கியிலும் காப்பீடு செலுத்தி இழப்பீடு பெற விண்ணப்பிக்கின்றனர். இதை கண்டறிந்த அதிகாரிகள் இழப்பீட்டை நிறுத்திவைத்துள்ளனர். சில விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.