

தமிழக அரசின் ரூ.4.5 லட்சம் கோடி கடனை சமாளிக்கும் நிலை திமுகவுக்கு வராது. எனவே, இதுகுறித்து திமுக கவலைப்பட வேண்டாம் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: கடந்த 2011-ம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் படிக்கும்போது, ‘ஒரு லட்சம் கோடி கடன் சுமை உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று, ரூ.4.5 லட்சம் கோடிக்கு கொண்டுவந்து விட்டுள்ளீர்கள். எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால், ரூ.4.5 லட்சம் கோடியை எங்கள் தலைவர் எப்படி அடுத்தமுறை சமாளிக்கப் போகிறார்? என்பதுதான்.
முதல்வர் பழனிசாமி: அப்படிப்பட்ட நிலைமை வராது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அன்று ரூ.1 லட்சம் கோடி என்பது, இன்றைய 4.5 லட்சம் கோடிக்கு சமம்.
துரைமுருகன்: 4.5 லட்சம் கோடி இன்று எதற்கு சமம்?
முதல்வர் பழனிசாமி: அன்றைய மதிப்பு வேறு; இன்று மதிப்பு வேறு. விலைவாசி உயரும் போது மதிப்பும் உயர்கிறது. அன்று 1 லட்சம் கோடி என்பது பெரியது. 10 ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு உயர்வால் இன்று ரூ.4.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.