Published : 19 Feb 2020 09:16 PM
Last Updated : 19 Feb 2020 09:16 PM

கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி : மாநிலக்கல்லூரியில் தொடங்கியது

சென்னை, மாநிலக் கல்லூரியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளின் தேசிய மாணவர் படை, மாணவ, மாணவியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

தமிழக கடலோர பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களின் அபாயத்தை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கடலோர பேரிடர் அபாயம் குறைப்பு திட்டம் (Coastal Disaster Risk Reduction Project) ரூ.1560.194 கோடி திருத்திய மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ரூ.310 கோடி செலவில் பல்வேறு பேரிடர்களை தாங்கக்கூடிய 14347 வீடுகளும், 143 இடங்களில் அறிவிப்பு பலகைகளுடன் கூடிய முறையான இணைப்பு வழித்தடங்களும், ரூ.331.03 கோடி செலவில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், ரூ.325.91 கோடி செலவில் மீன்வள உட்கட்டமைப்புக்கள் மற்றும் நிலைத்த வாழ்வாதாரப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், பேரிடர்களின் பாதிப்பிற்கு இலக்காகும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தகவல்கள் வழங்கும் பொருட்டு ரூ.50 கோடி செலவில் முன்னெச்சரிக்கை கருவி அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. வேளாங்கண்ணி மற்றும் கடலூர் நகராட்சிகளில் ரூ.406.83 கோடி செலவில் பூமிக்கு மேலுள்ள மின் இணைப்புக்களை பூமிக்கு கீழான இணைப்புகளாக மாற்றும் பணி செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதுவன்றி, ரூ.15 கோடி செலவில் பேரிடர் அபாயத்திற்குள்ளாகும் கடலோரத்தில் வாழும் சமூகத்தினருக்கு சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.1.26 கோடி செலவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களிலும் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பாடத்திட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பேரிடர் மேலாண்மை குறித்து பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மனிதர்கள் மற்றும் இயற்கையினால் ஏற்படும் பேரிடர்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், குறிப்பாக நீர்நிலைகள் (ஆறுகள், காட்டாறுகள், நீர் அருவிகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகள், வடிகால்கள், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் முதலியவை) தொடர்பான விபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெருமளவிலான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்றன. எஞ்சிய 32 மாவட்டங்களில், ஒத்திகைப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளின் தேசிய மாணவர் படை, மாணவ, மாணவியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சியினை 1.23 கோடி ரூபாய் செலவில் வழங்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டு, இன்று (19.02.2020), மாநிலக் கல்லூரியில் இப்பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது.

இந்தப் பயிற்சி தொகுப்பினில், 80 தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கும், தேசிய மாணவர் படையினைச் சார்ந்த 1500 மாணவ மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற்ற தேசிய மாணவர் படையினைச் சார்ந்த மாணவ, மாணவியர், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று, சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயிற்சி திட்டத்தில் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தெருமுனை நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன. மேலும், பேரிடர் தொடர்பான குறும்படங்கள் வெளியிடப்படுவதோடு, பொது மக்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் பகிரப்பட உள்ளது.

இதுவன்றி, விழிப்புணர்வுப் பேரணி, கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டி, படம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளும் இந்தப் பயிற்சித் தொகுப்பினில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் மாநிலக்கல்லூரி முதல்வர் பத்மினி அனைவரையும் வரவேற்றார், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி விளக்க கையேட்டினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார்.

மேலும், இவ்விழாவில், அமைச்சர் கே.பி. அன்பழகன் பேரிடர் மேலாண்மை கண்காட்சியினை துவக்கி வைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் பேரிடர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் ராதாகிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், சைலேந்திர பாபு, மாநிலக் கல்லூரி முதல்வர் பத்மினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x