Published : 19 Feb 2020 05:22 PM
Last Updated : 19 Feb 2020 05:22 PM

தென் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை பூங்காக்களில் இலவச ‘வைஃபை’ வசதி: போட்டித் தேர்வாளர்களுக்காக மாநகராட்சி ஏற்பாடு

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சியில் ‘பூங்கா’க்களில் இலவச வைஃபை நெட் வொர்க் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஒரு நாளைக்கு இந்த வைஃபை வசதியை 45 நிமிடங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. போட்டித் தேர்வாளர்களுக்கும், நடைபயிற்சிக்கு வருபவர்களை ஊக்குவிக்கவும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, மூளையில் தொடங்கி இதயம், நுரையீரல், கல்லீரல் வரை அனைத்து உடல் உறுப்புகளும் இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் மனிதர்கள்தான் தற்போது ஓடாமல், நடக்காமல் சொகுசு வாழ்க்கைக்குள் மூழ்கிவிட்டனர்.

உடல் உழைப்பு குறைந்துவிட்ட இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உடற்பயிற்சி கட்டாயமாக தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது அவசியமாகிறது. அதைகூட சிலர் செய்யத் தயங்குகின்றனர்.

நடைப்பயிற்சியை சுவாரஸ்யமாக்க பாட்டு கேட்டுக் கொண்டே செய்தி கேட்டு கொண்டோ நடக்கும் வகையில் மதுரை மாநகராட்சிப் பூங்காக்களில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதனால், உடலை நோயில்லாமல் வைத்திருக்க தற்போது காலை, மாலை நேரங்களில் பூங்காக்களில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரையில் மாநகராட்சி சுற்றுச்சூழல் (ஈக்கோ பார்க்) பூங்கா, வண்டியூர் பூங்காக்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்கின்றனர். தொழில் அதிபர்கள், அலுவலகப் பணியாளர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இந்த பூங்காக்களுக்கு நடைப்பயிற்சிக்கு வருகின்றனர்.

அவர்களை மகிழ்விக்கவும், நடைப்பயிற்சியை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக,மாநகராட்சி ஈக்கோ பூங்கா, வண்டியூர் பூங்காக்களில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்கிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:

தற்போது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்கள், தொழில்முனைவோர்க்கு இணைய வசதி அத்தியாவசியமாகிவிட்டது.

குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு சில ‘ஆப்’களை பயன்படுத்திப் படிக்க வேண்டியது இருக்கும். அதனால், மாநகராட்சி வளாகத்தில் படிக்கும் போட்டித் தேர்வாளர்கள் வசதிக்காக ஏசிடி பைபர் நெட் (ACT Fiber Net) தாமாக முன்வந்து இலவசமாக வைஃபை நெட்வொர்க் அமைத்துத் தரவுள்ளது.

அதுபோல் உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சியை ஊக்குவிக்க, மாநகராட்சி பூங்காக்களில் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், இதே ‘ஏசிடி பைபர் நெட்’ நிறுவனம் உதவியுடன் இலவச வைஃபை நெட்வொர்க் வசதி அமைக்கப்பட உள்ளது.

பூங்காக்களில் நடைப்பயிற்சி வருவோர் ஒரு நபர் அதிகப்பட்சம் தனது செல்போனில் 45 நிமிடங்கள் வரை இந்த வைஃபை வசதி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வைஃபை டிவைஸ் வடிவமைக்கப்படுகிறது.

வைஃபை வசதியால் நடைப்பயிற்சிக்கு வருவோர், தடையில்லா நெட்வொர்க்கை பயன்படுத்தலாம். முதற்கட்டமாக இந்த வைஃபை வசதியை மாநகராட்சி ஈக்கோபார்க்கில் தொடங்கப்படுகிறது.

அதன்பிறகு வண்டியூர் பூங்காவிலும் தொடர்ந்து படிப்படியாக மற்ற முக்கியமான பூங்காக்களிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு பூங்காவில் வாக்கிங் செல்வோருக்காக இலவச வைஃப் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மதுரை மாநகாட்சி பூங்காக்களில் தான் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 64 பள்ளிகள் உள்ளன. இதல், 34 பள்ளிகள் வரை இலவச வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x