

9, 10-ம் வகுப்புகளில் தமிழக மாணவர்களின் இடைநிற்றல் விவகாரத்தில் மத்திய அரசின் புள்ளிவிவரத்துக்கும் மாநில அரசின் புள்ளிவிவரத்துக்கும் முரண்பாடு இருப்பதாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.
சமீபத்தில் மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் கேள்விக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''தமிழகத்தில் 2016-17 ஆம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 8 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18 ஆம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்தது’’ என்று தெரிவித்தார்.
இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, ''9,10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், 2015-16 ஆம் ஆண்டு 3.6% ஆகவும், 2016-17 ஆம் ஆண்டில் 3.7% ஆகவும், 2017-18 ஆம் ஆண்டில் 3.6 % ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 2016-17 ஆம் ஆண்டில் 8% ஆக இருந்தது. 2017-18 ல் 16% ஆக உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 8% உயர்ந்ததற்கான காரணம் என்ன? தமிழக அரசு புள்ளி விவரத்தை மாற்றிக் கொடுத்தற்கான காரணம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''2017-18ல் இடைநிற்றல் சதவீதம் 3.6 சதவீதம்தான். தமிழக அரசின் புள்ளிவிவரம்தான் சரியானது. 2017-18 புள்ளி விவரத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரத்துக்கும் மாநில அரசு கொடுத்த புள்ளிவிவரத்துக்கும் இதேபோல்தான் வித்தியாசம் உள்ளது.
இடைநிற்றல் புள்ளிவிவரம் முன்பு ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மூலமாக எடுக்கப்படுகிறது'' என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் பூங்கோதை, ''அரசு உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கான விதியில் மாற்றம் செய்யப்படுமா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''இது ஒரு நல்ல ஆலோசனை. கனிவோடு பரிசீலிக்கப்படும்'' என்றார்.