திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் கோவில்பட்டி ஒன்றியக்குழுவின் முதல்  கூட்டம் ஒத்திவைப்பு

திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பால் கோவில்பட்டி ஒன்றியக்குழுவின் முதல்  கூட்டம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தததால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக உறுப்பினர்கள் எம்.பூமாரி (9-வது வார்டு), பொன்னுத்துரை ( 12-வது வார்டு) ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 9 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றிப்பெற்றனர். பின்னர் சுயேட்சை கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுக கூட்டணி பலம் 11 ஆக உயர்ந்தது.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைவது உறுதியானதால் ஜன. 11-ல் தேர்தல் அலுவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக பொய் சொல்லி மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஜன. 30-ல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் 10 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 9 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் அதிமுக வேட்பாளர் 10 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுக கவுன்சிலர்களை போலீஸாரை வைத்து வெளியேற்றினார்.

இந்நிலையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் பிப். 20-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவுன்சிலர்களான எங்களுக்கு இதுவரை நோட்டீஸ் வரவில்லை. விதிப்படி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தொடர்பாக 3 நாட்களுக்கு முன்பு கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

அவசர கூட்டமாக இருந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் கூட்டம் நடத்த ஊராட்சி ஒன்றிய தலைவர் முடிவு செய்துள்ளார். எனவே நாளை கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரன் வாதிட்டார்.

அரசு தரப்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நாளை (பிப். 20) நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in